தமிழகப் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில கல்விக் கொள்கை குறித்த அறிவிப்பை வெளியிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்த மாற்றங்கள் குறித்து விளக்கமளித்தார்.
புதிய கல்விக் கொள்கையின்படி, தமிழக அரசின் பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளில் இனி 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்கப்படும். பொதுத்தேர்வுகள் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே நடத்தப்படும். இந்த நடப்பு கல்வியாண்டிலிருந்தே 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார். அதே சமயம், 11-ஆம் வகுப்பை மாணவர்கள் தங்களை 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ளும் ஒரு ஆண்டாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த அறிவிப்பு குறித்து பல கல்வியாளர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 11-ஆம் வகுப்பு பொதுத் ர்வு ரத்து செய்யப்படுவதால், சில தனியார் பள்ளிகள் 11-ஆம் வகுப்பு பாடங்களுக்கு பதிலாக 12-ஆம் வகுப்புப் பாடங்களையே நடத்த வாய்ப்புள்ளது என்றும், இது மாணவர்களின் கற்றல் திறனை பாதிக்கலாம் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.