தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் அதிரடியாக நீக்கப்பட்டதை அடுத்து அவரது பொறுப்பை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு கேபிள் விவகாரம் தொடர்பாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு எதிராக இன்று காலை மணிகண்டன் பேட்டி அளித்ததாகவும், இதன் காரணமாகவே அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் நீக்கப்பட்டிருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மணிகண்டன், அரசு கேபிள் டி.வி நிறுவன தலைவராக இருக்கும் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் தன்னிடம் உள்ள 2 லட்சம் கேபிள் இணைப்புகளை அரசு கேபிள் நிறுவனத்தில் இணைக்க வேண்டும் என கூறியிருந்தார். அவருடைய இந்த பேட்டி பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது