தமிழகத்தை தாக்கிய ஜிகா வைரஸ் - பீதியில் பொதுமக்கள்

செவ்வாய், 11 ஜூலை 2017 (10:36 IST)
கிருஷ்ணகிரியை சேர்ந்த வாலிபர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தமிழகத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


 


 
2007 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் பசபிக் நாடுகள், ஆப்ரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஜிகா வைரஸ் பரவ தொடங்கியது. இதனால் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து ஜிகா வைரஸுக்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் சர்வதேச நாடுகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 
 
இந்தியாவில் ஜிகா பாதிப்பு இல்லை என கூறப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் உலக சுகாதார நிறுவனத்திற்கு மத்திய அரசு அளித்துள்ள அறிக்கையில், குஜராத் மாநிலத்தை சேர்ந்த 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
அதன் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், நெட்றாபாளையத்தில் வசிக்கும் 27 வயது வாலிபர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ள செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
காய்ச்சல், கண் மற்றும் தோல் எரிச்சல், மூட்டுவலி ஆகிய பாதிப்பின் காரணமாக அவர் அந்த பகுதியில் உள்ள சுகாதார மையத்திற்கு சென்று சிகிச்சை எடுத்துள்ளார். அதன் பின் அவருடைய சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைரலாஜி ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்ததில், அவர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 
தீவிர சிகிச்சைக்குப் பின் அவர் உடல் நலம் தேறி வருகிறார் எனவும், அவர் வசித்து வந்த நாட்றாம்பாளையம் கிராமத்தை சுற்றி உள்ள கிராமங்களில் 8 மருத்துவ குழுக்கள் முகாமிட்டு, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதகாவும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், ஜிகா வைரஸ் குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்