காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற அளித்த தீர்ப்பை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து காவிரி விவகாரம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஸ்டாலின் அனைத்து எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். பின்னர் நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்கள் காவிரி மேலாணமி வாரியம் அமைக்க கோரி அமளியில் ஈடுபட்டனர். துணை சபாநாயகரும் அதிமுக எம்.பியுமான தம்பிதுரை மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை முடக்குவோம் என்று தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை நீர்வளத்துறை செயலாளர் கர்நாடகா, கேரளா, தமிழகம், புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதன்பின்னர் பேசிய நீர்வளத்துறை செயலாளர், உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று அதன் தீர்ப்பில் கூறவில்லை என்று தெரிவித்தார்.