பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன், மத்திய அமைச்சர் நிதின்கட்காரி ஆகியோர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள், தர வேண்டிய நிதி ஆகியவை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்தார்.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 'பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றித் தர கோரிக்கை மனு வழங்கியதாகவும், நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை செயல்படுத்த வேண்டுகோள் விடுத்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்க பொருளாதார, தொழில்நுட்ப உதவி வழங்க கோரிக்கை விடுத்ததாகவும், தமிழகத்திற்கு வர வேண்டிய மானியம், நிதியை உடனடியாக விடுவிக்க கோரிக்கை விடுத்ததாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
மேலும் ஹைட்ரோகார்பன், மும்மொழிக்கொள்கை எல்லாம் முதல்வரின் கோரிக்கைகளில் இல்லையே? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, 'திறந்துவிட்டதெல்லாம் திமுக, அவர்கள் செய்ததை கேளுங்கள் என்றும் எங்களிடமே கேள்வி கேட்கிறீர்கள் என்றும் கூறினார். அதேபோல் தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளதாகவும், ஆணையத்தின் மூலமே காவிரி நீரை பெற முடியும் என்றும் கர்நாடக முதல்வரை தனித்து சந்தித்தால் கிடைக்குமா என்பது சந்தேகமே என்றும் கேள்வி ஒன்றுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார்