மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஜிபன் கிருஷ்ணா சாஹா தொடர்புடைய பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோது, அவர் தனது வீட்டில் இருந்து தப்பி செல்ல முயன்ற நிலையில் அதிகாரிகள் அவரை விரட்டி பிடித்தனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள பள்ளிகளில் நடந்த ஆசிரியர் மற்றும் பணியாளர் நியமன ஊழல் தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை நடத்திய தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக எம்.எல்.ஏ.வான ஜிபன் கிருஷ்ணா சாஹா வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஜிபன் கிருஷ்ணா சாஹாவின் பர்வன் இல்லத்திலும், அவரது மாமனார் ரகுநாத் கஞ்சில் உள்ள சொத்துகளிலும் அமலாக்கத்துறை குழுக்கள் தற்போது சோதனை நடத்தி வருகின்றன.
சோதனை நடைபெறுவதை தெரிந்துகொண்ட எம்.எல்.ஏ., தனது வீட்டின் சுற்றுச்சுவரை கடந்து ஒரு விவசாய வயல்வெளிக்குள் ஓடி தப்பிச்செல்ல முயன்றபோது, அமலாக்கத்துறை அதிகாரிகளாலும் மத்தியப் பாதுகாப்பு படையினராலும் சேறு சகதியில் அவர் பிடிபட்டதாக கூறப்படுகிறது.
பள்ளிக்கல்வி நியமன ஊழலின் குற்றவியல் அம்சங்களை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது. கைது செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சாஹா கொல்கத்தாவுக்கு கொண்டு செல்லப்பட்டு, சிறப்பு அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.