நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் அல்லது பொறுப்பாளர்கள் மீது என்.ஐ.ஏ விசாரணை என்பது கண்டனத்திற்குரியது. மாநில கட்சிகளின் மீதான நெருக்கடிகளை பாஜக அதிகரித்துக்கொண்ட வண்ணம் இருக்கிறது. அமலாக்கத்துறை, தேசியபுலனாய்வு முகமை எனும் நிறுவனங்கள் பாஜக-ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றின் கைப்பாவையாக இயங்குகின்றன.
இந்த அமைப்புகளின் நோக்கம் ஊழலை ஒழிப்பதோ, தேசத்தை பாதுகாப்பதோ அல்ல, மாறாக பாஜகவின் நலனுக்காக செயல்படுவதாகவே அமைவதாக இந்தியாவின் பல முன்னனி தலைவர்களே அம்பலப்படுத்தியிருக்கின்றனர். மாநிலங்களின் கட்சிகள் முடங்கும் வண்ணம் செயல்படும் போக்கானது கண்டனத்திற்குரியது.
மாநில கட்சிகளிடையே கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், தேர்தல் அணுகுமுறைகள் மாறுபட்டு இருந்தாலும் பாஜக எனும் பெரும் ஆபத்தை அனைவரும் எதிர்கொண்டே இருக்கிறார்கள் என்பதை இக்கட்சிகள் உணரவேண்டும். தமக்குள்ளாக பிரிந்து எதிரிக்கு வழிவிடும் போக்கை ஆங்கிலேயர் காலம் முதல் இன்றுவரை தொடர்வது துயரமானது. நமக்குள்ளாக இருக்கும் போட்டிகளுக்கு அப்பாற்பட்டு மாநிலத்தின் உரிமை காக்க ஒற்றுமையுணர்வுடன் பாஜக தமிழ்நாட்டில் காலூன்றச்செய்யாமல் இயங்க வேண்டுமென்பதை இந்நிகழ்வு மேலும் உறுதி செய்கிறது.