தந்தையின் காலில் விழுந்த கவர்னர் தமிழிசை... கட்சி பேதம் கடந்த பாசம்!
ஞாயிறு, 8 செப்டம்பர் 2019 (12:44 IST)
தலைவராக இருந்து சக அரசியல்வாதிகளாலும் நெட்டிசன்களாலும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டும், கலாய்க்கப்பட்டும் இருந்த தமிழிசை செளந்திரராஜன், தனக்கு நேர்ந்த விமர்சனங்களை பொறுமையாக சந்தித்தார். அவரது பொறுமைக்கு கிடைத்த பரிசாக சமீபத்தில் தெலுங்கானா மாநில கவர்னராக, குடியரசு தலைவரால் நியமனம் செய்யப்பட்டார்.
ஒரு தமிழர், அதிலும் ஒரு பெண்ணுக்கு கவர்னர் பதவி கிடைத்துள்ளதை கட்சி வேறுபாடின்றி அனைவரும் பாராட்டியதால் தமிழிசை ரொம்பவே நெகிழ்ந்து போனார். இந்த நிலையில் தெலங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவியேற்றார்.
இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு, ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழிசை கவர்னராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, ராகவேந்திரா எஸ்.சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்,ஆளுநர் தமிழிசையின் தாயார், தந்தை குமரி ஆனந்தன் ,குடும்பத்தினர் ,உறவினர்கள்,மற்றும் நண்பர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது, பிரபல காங்கிரஸ் மூத்த தலைவரும், சொற்பொழிவாளருமான தனது தந்தை குமரி ஆனந்தன் - தாயார் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார் தமிழிசை. அருகில் அவரது கணவர் சவுந்தரராஜன் இருந்தார்.
தெலுங்கானா மாநிலத்தின் கவர்னாராக, தமிழிசை நியமிக்கப்பட்ட அறிவிப்பு வந்தததுமே, அவர் தனது தந்தையைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார்...அதற்கு குமரிஆனந்தன், ’ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் ’என்று பெருமிதம் கொண்டு தமிழிசை சவுந்தரராஜனை வாழ்த்தினார்.
தமிழிசையின் தந்தை குமரி ஆனந்தன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகவும், மூத்த காங்கிரஸ் தலைவராகவும், அவரது சித்தப்பா - பிரபல தொழிலதிபரும் (வசந்த் அன் கோ ) காங்கிரஸ் எம்பியுமான வசந்தகுமார் காங்கிரஸ் பாரம்பரியத்தில் இருக்கின்றபோது, தனக்கு அக்கட்சியில் ஈடுபாடு இல்லாமல், காங்கிரஸுக்கு எதிர்கட்சியான இருக்கும் பாஜகவில் ஐக்கியமானார்.
இதனால், குமரிஆனந்தன், தமிழிசையை வெறுக்கவில்லை என்றாலும்கூட அவர் ஏற்றுக்கொண்ட கட்சியினால் மனமுடைந்திருப்பார். அதைப்பற்றிக் கவலைப்படாமல் தனக்குப் பிடித்த கொள்கையுடைய கட்சியின் தன்னை இணைத்து மருத்துவராக விளங்கியபோதும், பொதுத்தளத்தில் அரசியலில் சுறுசுறுப்பாக விளங்கி எதிர்க்கட்சிகளுக்கு சூடான பதிலடி கொடுத்து கொடுத்தார் தமிழிசை. இன்று கவர்னராக பதவியேற்றதும், முதலில் தந்தை குமரி ஆனந்தனின் காலில் அவர் விழுந்து ஆசிர்வாதம் பெற்றது கட்சி பேதம் கடந்த இருவரின் பாசத்தை காட்டுகிறது.
அன்று உடைந்த குமரி ஆனந்தனின் மனம், இன்று, மகள் சேர்ந்து, இயங்கிப் பணியாற்றி வந்த அதே கட்சியினால் உயர்வு பெற்றுள்ளதைக் கண்டுள்ளதை பெருமை அடைந்திருக்கும்! கவர்னர் தமிழிசையின் உயர்வு அவரது தந்தைக்குப் பெருமையும் கூட.
தன் மீதான ஊடகங்களில் அத்துணை ஏச்சுகளையும், விமர்சனங்களையும் தவிடுபொடியாக்கி,தன் அயரா உழைப்பினால் பாஜக கட்சியின் தலைவரானார். அந்தப் பதவியில் சிறப்பாகச் செயலாற்றி இன்று உயந்த பதவி ஏற்றுள்ளார் கவர்னர் தமிழிசை.
தமிழிசை சவுந்தரராஜன் பாஜகவில் சேர்ந்து, 20 வருடங்கள் ஆகிறது, தமிழக பாஜக தலைவராக அவர் வகித்துவந்த நிலையில்,அவரது உழைப்பையும் திறமையும் பார்த்த பாஜக தலைமை அவரைத் தெலுங்கானாவின் ஆளுநராக நியமித்தது. இந்த உத்தரவை கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார்.
பின்னர், தன்னை தெலுங்கானாவின் ஆளுநராக தேர்ந்தெடுத்த பாஜக தலைவர் மற்றும், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவித்தார். இன்று, தெலுங்கானாவில் முதல் பெண் கவர்னராக பதவியேற்றுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு, பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.