ஒருத்தர் எடப்பாடி பக்கம் போனா எல்லாரும் போய்விடுகிறோம் - தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி

செவ்வாய், 19 ஜூன் 2018 (16:16 IST)
நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். எங்களில் யாரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைய மாட்டோம் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களில் ஒருவரான தங்கதமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

 
இந்நிலையில், தகுதி நீக்க வழக்கில் இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பு வழங்கியதால், தற்போது இந்த வழக்கு 3வது நீதிபதிக்கு சென்றுள்ளது. தங்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் இருந்த தினகரன் தரப்பு இந்த தீர்ப்பில் கடும் அதிர்ச்சியைடந்துள்ளது. இதில், சபாநாயகருக்கு எதிரான தனது மனுவை நீதிமன்றத்தில் வாபஸ் வாங்கப் போகிறேன் எனவும், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன் எனவும் தங்க தமிழ்ச்செல்வன் ஏற்கனவே அறிவித்துவிட்டார். 
 
எம்.எல்.ஏ பதவியை தக்க வைக்கும் பொருட்டு தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி அணி பக்கம் செல்ல வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளிவந்தது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி தங்க தமிழ்ச்செல்வன் உட்பட மற்ற எம்.எல்.ஏக்கள் எங்கள் பக்கம் வந்தால் மகிழ்ச்சிதான் என நேரிடையாகவே அழைப்பு விடுத்தார்.  அதோடு, பிரிந்து சென்றவர்கள் திரும்பி வர வேண்டியது காலத்தின் கட்டாயம் என இன்று காலை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். எனவே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடி பக்கம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 
 
இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல் எம்.எல்.ஏ ஆகியோர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
 
அப்போது பேசிய தங்க தமிழ்ச்செல்வன் “நாங்கள் அனைவரும் தினகரன் பக்கமே ஒற்றுமையுடன் இருக்கிறோம். வழக்கை வாபஸ் பெறுவது எனது தனிப்பட்ட விருப்பம். அதனால், கருத்து வேறுபாடு என கூறுவதில் அர்த்தமில்லை. எங்களில் ஒருவரையாவது முதல்வர் பழனிச்சாமி தரப்பு இழுத்துவிட்டால், நாங்கள் அனைவருமே அங்கு சென்று விடுகிறோம். ஆனால், அவர்களால் எங்களில் ஒருவரையாவது இழுக்க முடியுமா?” என சவால் விடுத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்