மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்

ஞாயிறு, 17 ஜூன் 2018 (12:16 IST)
தகுதி நீக்க வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகாத காரணத்தால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களில் பலர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பக்கம் செல்ல வாய்ப்பிருப்பதாக செய்திகள் கசிந்து வருகிறது.

 
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வழங்கினார். ஆனால், நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பில், சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தீர்ப்பு வழங்கினார்.    இதனால், 3வதாக ஒரு நீதிபதி நியமிக்கப்பட்டு அவர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால், 3வது நீதிபதி நியமிக்கப்பட்டு தீர்ப்பு வெளியாவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம் எனத் தெரிகிறது. அப்படியே தீர்ப்பு வெளியானாலும், 3வது நீதிபதியின் தீர்ப்பு, தலைமை நீதிபதியின் தீர்ப்பை பின்பற்றித்தான் இருக்கும் என்கிற கருத்து நிலவுகிறது.

 
ஏற்கனவே 10 மாதங்கள் எம்.எல்.ஏ பதவியில் இல்லாமல் தவித்து வந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களில் பலரும் இனி தங்களுக்கு அந்த பதவி கிடைக்காமலே போய்விடுமோ என்கிற கலக்கத்தில் இருக்கிறார்களாம். இந்த தீர்ப்பால் அதிருப்தியடைந்துள்ள டிடிவி தினகரன், 18 எம்.எல்.ஏக்களையும் ராஜினாமா செய்து விட்டு எடப்பாடி அரசுக்கு நெருக்கடி கொடுக்க நினைக்கிறாராம். இப்போதைக்கு தங்க தமிழ்ச்செல்வன் மட்டுமே இந்த இதை ஏற்றுக்கொண்டுள்ளார். வழக்கை வாபஸ் பெற இருப்பதாக அவர் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
 
ஆனால், செந்தில் பாலாஜி, வெற்றிவேல் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களுக்கு ராஜினாமா செய்வதில் உடன்பாடில்லையாம். எம்.எல்.ஏ பதவி என்பது சாதாரண விஷயமல்ல. மீண்டும் அதை பெற முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது என்கிற கலக்கத்தில் அவர்கள் இருப்பதாக தெரிகிறது. தன்னுடைய பேச்சை கேட்காத இவர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் செல்ல வாய்ப்பிருக்கிறது என தினகரன் கருதுவதாகவும் தெரிகிறது.

 
ஏற்கனவே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் எடப்பாடி தரப்பு ஈடுபட்டுள்ளது. அதற்கான பொறுப்பு முக்கிய அமைச்சர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் தொடர்ந்து பேசி வருகிறாராம். நீங்கள் தினகரன் பக்கம் இருந்தால் எம்.எல்.ஏ பதவியையும் இழந்து போவீர்கள். எங்கள் பக்கம் வாருங்கள். உங்களுக்கு தேவையான அனைத்தும் செய்து தருகிறோம். உங்களை காப்பாற்றுவது தினகரனின் நோக்கமல்ல. எடப்பாடி ஆட்சியை கவிழ்ப்பதே அவர் நோக்கம். அவரின் சுயலாபத்திற்காக உங்களை பயன்படுத்துகிறார். அவர் மட்டும் எம்.எல்.ஏ. பதவியில் நீடிப்பார். உங்களை பற்றி அவருக்கு அக்கறையில்லை. எனவே நிதானமாக யோசித்து முடிவு செய்யுங்கள். உங்களுக்கான கதவு திறந்தே இருக்கிறது.  எங்கள் அணியுடன் இணையுங்கள்.  உடனடியாக முதல்வர் பழனிச்சாமியை நேரில் வந்து பாருங்கள் என ஆசை வார்த்தை கூறி வருகிறாராம்.
 
எனவே, தினகரனின் பெரும்பாலான ஆதரவு எம்.எல்.ஏக்கள் விரைவில் பழனிச்சாமி பக்கம் சாய வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது தினகரன் தரப்பிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்