தைப்பூச திருவிழா இன்று தமிழக முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி பழமுதிர்ச்சோலை ஆகிய கோவில்களில் அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து மொட்டை அடித்து, காவடி எடுத்து வந்து இரண்டு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு கோவிலில் பக்தர்கள் அதிக அளவு குவிந்துள்ளதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயிலிலும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தைப்பூசம் முருகப்பெருமானுக்கு மட்டுமின்றி சிவபெருமானுக்கு உகந்த நாள் என்பதால் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயில் உட்பட அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.