91 ஆம் வயதில் பிரசாரத்தை தொடங்கும் ஆசிரியர் கே. வீரமணி

sinoj

திங்கள், 1 ஏப்ரல் 2024 (20:25 IST)
18 வது மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில்,  அரசமைப்புச் சட்டத்தின் இறையாண்மை - சமதர்மம் - மதச்சார்பின்மை - ஜனநாயகம் - குடியரசு குடியாட்சியைத் தகர்த்திட்ட மோடி ஆட்சி  என்று திராவிடர் கழகம் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
 
''மக்கள் ஏமாந்து பி.ஜே.பி.,க்கு வாக்களித்தால் இதுவே நாட்டின் கடைசி தேர்தலாகிவிடும்!
 
ஒடுக்கப்பட்டோர் - சிறுபான்மையினர் - மகளிர் ஆகியோரின் உரிமை சார்ந்த இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வீர்!
 
1948 தேர்தல் முதல் வரும் தேர்தல் உள்பட 18 ஆவது தேர்தல் பிரச்சாரம் - அனுபவம் எனக்குண்டு!
 
91 ஆம் வயதில், தந்தை பெரியார் வழியைப் பின்பற்றிப் புறப்படுகிறேன்!
 
நாளை (2.4.2024) மாலை முதல் 18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான எனது பரப்புரை தென்காசி (தொகுதி)யிலிருந்து தொடங்குகிறது.
 
18 ஆவது தேர்தல் பிரச்சாரத்தைச் சந்திக்கிறேன்!
 
1952 இல் முதல் தேர்தல் என்று கணக்கிட்டு, நாடு சுதந்திரம் அடைந்து- பிரிட்டிஷ் ஆட்சி வெளியேறிய காலக் கணக்குத்தான் இந்த 18 ஆவது தடவை தேர்தல்.
 
ஆனால், அதற்கு முந்தைய 1947-1948 தேர்தல் காலத்திலிருந்து, எனது மாணவப் பருவம் தொட்டே எங்கள் ஊர் கடலூரிலிருந்து, திராவிடர் கழகத்தின் தொண்டன் என்கிற தன்மையில் மஞ்சள் பெட்டி, ‘‘பச்சைப் பெட்டி’’ என்று வாக்களித்த தேர்தல்களையும் கண்டு, உள்ளூரில் பங்கேற்ற அனுபவம் உண்டு.
 
இப்போது நடைபெறவிருக்கும் இந்த 2024 தேர்தல் வெறும் பதவிக்கான தேர்தல் அல்ல. கொள்கைப் போராட்டத்திற்கான தேர்தல் அறப்போர் ஆகும்!
 
நெருக்கடி காலத்தைப் பிரகடனப்படுத்திய இந்திரா காந்தி தலைமையிலான ஆட்சியை வாக்குச் சீட்டுமூலம் வீழ்த்தியவர்கள் வாக்காளப் பெருமக்கள்!
 
முந்தைய நெருக்கடி காலம் முடிந்து 1977 இல் நடைபெற்ற ‘மிசா’ கைதிகளாகி, விடுதலை பெற்று நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் விடுதலை பெற்று, பிரதமர் யார் என்று யாரையும் அடையாளம் காட்டி, வாக்குச் சேகரிப்பு நடைபெறாமல் நடைபெற்ற அத்தேர்தல், நெருக்கடி கால (எமர்ஜென்சி) அச்சம் முழுமையாக நீங்காத நிலையில், மவுனம் காத்த மக்கள், நெருக்கடி நிலை பிரகடனம், எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையான பிறகும்கூட, வாக்குச் சீட்டையே ஜனநாயகப் பாதுகாப்பு போராயுதமாக்கி அன்றைய ஆட்சியிலிருந்த பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியை மாற்றிக் காட்டியது.
 
முன்பு உணராதவர், அவர், தான் எடுத்த நிலைக்கு, சென்னை கடற்கரையில் நடந்த கூட்டத்திற்குப் பின், தேர்தலில் பகிரங்க அறிவு நாணயத்துடன் வருத்தம் தெரிவித்தார்.
வரலாறு இப்படி பல திருப்பங்களை நாளும் ஏற்படுத்தி வருகிறது!
 
கடந்த பத்தாண்டுகால பி.ஜே.பி. ஆட்சியில் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையைத் தகர்த்தது மோடி தலைமையிலான ஆட்சி!
 
நெருக்கடி காலத்தை வெளிப்படையாக அறிவித்து, பலரை ‘மிசா’வில் கைது செய்து சிறையில் அடைத்தாலும்கூட, அதை வெளிப்படையாக, அறிவு நாணயத்திற்குக் குறைவில்லாமல், நெருக்கடி காலத்திலும், ஒரு தேர்தல் ஆணையத்தினை தன்வசமாக்கி அவர் அந்த 1977 ஆம் ஆண்டு தேர்தலை நடத்தவில்லை!
 
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சி - பிரதமர் மோடி அரசு, முந்தைய நெருக்கடி காலத்தில் தாங்கள் பாதிக்கப்பட்டதைக் கூட வசதியாக மறந்துவிட்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஆட்சியை நடத்தாமல் - அதன் அய்ந்து முக்கிய தத்துவங்களை -
 
1. மக்களின் இறையாண்மை
2. சமதர்மம்
3. மதச்சார்பின்மை
4. ஜனநாயகம்
5. குடியரசு - குடியாட்சி
 
என்பவற்றை இந்த 10 ஆண்டுகளில் பறிமுதல் செய்த ஆட்சியாக ஆக்கி, கூட்டாட்சித் தத்துவத்தை ஒரு புதுப் பெயர் Co-operative Federation - கூட்டுறவு கூட்டாட்சி என்று கூறி, நடைமுறை ஒன்றை ஒன்றிய அரசு ஆட்சி என்றே மாநிலங்களின் அடிப்படையையே காணாமற் செய்துவிட்டு, ‘அடிப்படை உரிமைகள்’ என்ற முக்கிய பகுதி செல்லரிக்கப்பட்ட சீர்கேட்டிற்கு ஆளாகி, பேச்சுரிமை, கருத்துரிமை காணாமற்போய் - எதேச்சதிகார மன்னர்களின் ராஜ்ஜியம்போல - ஆட்சியின் மூன்று முக்கிய தூண்கள் சிதையும் நிலை வெளிப்படையாகவே அரங்கேற்றப்பட்டு வருகிறது.
 
1. நிர்வாகம் - ஆளுமை (Executive)
2. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் (Legislative)
3. நீதித்துறை - உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மதியாமை, நியமனங்கள் ஒருதலைப்பட்சம்
4. நான்காவது தூண் என்று அழைக்கப்படும் ஊடகங்கள் (அ) அதன் பெருமுதலாளிகள்மூலம் தன்வயப்படுத்துதல் அல்லது (ஆ) அச்சுறுத்தப்படுதல் என்பவை.
- இப்படி பல்துறை உரிமைகள் பகிரங்கமாகப் பறிப்பு நடைபெறும் அபாயம் உச்சகட்டத்தில்!
 
 
திர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கும் திரிசூலங்கள்!
 
எதிர்க்கட்சிகளின் குரல்வளை நெரிக்கப்படும் (திரிசூலங்கள்)
1. வருமான வரித் துறை
2. சி.பி.அய்.
3. அமலாக்கத் துறை
 
இந்த முப்பெரும் கூர்முனை - ஜனநாயகத்தின் குரல் வளையை குத்திக் கிழித்துக்கொண்டே உள்ளது!
 
‘இம்மென்றால் சிறைவாசம்! ஏனென்றால் வனவாசம்‘ என்பதை நாட்டில் உள்ள கட்சி சார்பின்றி அறிவு ஜீவிகளையும்கூட அச்சத்திற்கு ஆட்படுத்தி, எங்கே நமக்கும் ‘‘நகர்ப்புற பயங்கரவாதிகள்’’  (Urban Naxal) என்று குறிப்பிட்டு, எதேச்சதிகாரத்தின் சவுக்கால் வதைபடும் கொதிநிலை ஏற்பட்டுவிடுமோ என்ற அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
 
1. ஆட்பலம் (Muscle Power)
2. பண பலம் (Money Power)
3. ஊடக பலம் (Media Power)
 
எதிர்த்துக் கேட்டால் பயங்கரவாதம் - பிரிவினைவாதம் என்று பழி சுமத்துவதா?
 
எதிர்க்குரல் கேட்டால், பயங்கரவாதம், பிரிவினைவாதம், ஊழல் பேர்வழிகள் என்ற பழியை வீச்சரிவாள்போன்று பேசி, வீசும் கொடுமை! இதை மக்களின் விவீஸீபீ றிஷீஷ்மீக்ஷீ - அறிவு சாதுரியம் வீழ்த்திவிடுவது உறுதி! 
 
இவற்றை வீழ்த்தவே முடியாதா என்று ஏங்கும் - முன்பு மாற்றத்திற்காக வாக்களித்த, இளைஞர்கள், விவசாயிகள், மகளிர் இந்த 10 ஆண்டுகளில் சந்தித்த ஏமாற்றங்களை உணரும் நிலை - தென்னாட்டில் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் பளிச்சிட்டு, கீழ்வானம் வெளுக்கத் தொடங்கிய நிலையில்தான், உண்மையான இரண்டாம் சுதந்திர ஜனநாயகக் காப்பு அறப்போராக - கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தம் ஒன்று பொதுத் தேர்தலாக - அமைதியான ஒரு விரல் அமைதிப் புரட்சியாக நடைபெறுகிறது!
 
எனவே, அச்சத்தைப் புறந்தள்ளி,
அற்ப ஆசைகளை ஒதுக்கி,
இன்றைய தலைமுறை மட்டுமல்ல - இனிவரும் இந்தியத் தலைமுறைகளின் உரிமைகளைக் காக்கவே இந்தப் புதிய அறப்போர்!
 
ஏமாந்தால் ஜனநாயகத்தில் 
இதுவே கடைசித் தேர்தலாகிவிடும்!
 
இப்போது ஏமாந்துவிட்டால், இனி ஜனநாயகத் தேர்தலில் இதுவே கடைசித் தேர்தல் என்றாகிவிடும் என்பதை நமது ஒப்பற்ற ஆட்சியின் ஜனநாயகப் பாதுகாப்பு அரண் அமைப்பின் காவலரும், இந்தியா கூட்டணிக்கு முகப்புரை எழுதி, ‘‘யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது’’ என்பதே முக்கியம் என்று விளக்கி இந்தியா (I-N-D-I-A) கூட்டணித் தலைவர்களை ஒருங்கிணைத்து, அக்கூட்டணியில் அகில இந்திய காங்கிரஸ், இடதுசாரிகள், மாநிலக் கட்சிகள் முதலிய 28 கட்சிகளையும் ஓரணியில்  திரண்டு, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ கட்டியுள்ளது புதிய நம்பிக்கையை உறுதியாகத் தோற்றுவித்துள்ளது!
 
பலவித மாய்மால வித்தைகளைப் புறந்தள்ளி, மக்களே வெற்றி பெறும் நிலை நாளுக்கு நாள் பெருகி வருகிறது!
 
ஆளும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மோடி ஆட்சியின் பொய் முகத்தைப் புரிந்துகொண்டு, ஒதுங்கவேண்டியவர்கள் ஒதுங்கிவிட்டார்கள்!
 
மக்களுக்குப் பரப்புரைமூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே மிகவும் முக்கியம்!
இதில் பல வியூகங்கள் ‘‘பா.ஜ.க.வின் B, C, D டீம்கள்’’ பல உள்ளன!
 
தேர்தல் பிரச்சாரத்திற்குப் புறப்படுகிறேன்.
 
எல்லாவற்றையும் தாண்டி, இறுதி வெற்றி இந்தியா கூட்டணிக்கே!
 
காரணம், அது ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினர், பாதிக்கப்பட்டோர், மகளிர் ஆகியவர்களைக் கொண்ட மக்கள் கூட்டணி!
 
‘‘இப்போது இல்லாவிட்டால், இனி எப்போதும் இல்லை’’ என்று மக்களுக்கு உணர்த்தவே - பரப்புரைப் பயணத்தில் - களத்தில் நிற்கும் 91 வயதிலும் துவளாத தொண்டனாகிய நான் களமிறங்குகிறேன். உயிர் முக்கியமல்ல, நாடு முக்கியம்!
 
இது தலைமுறை மாற்றத்திற்கு ஒரு பெரும் போர் - ஜனநாயகம்.
 
94 வயதிலும் மூத்திரச் சட்டியைத் தூக்கி, முக்கலும், முனகலுடனும் தொண்டாற்றிய தொண்டுப் பழமான தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவனான நான், அதை நினைத்தால், புத்தாக்கம் பெறுகிறேன்!
 
எனவே, புறப்படுகிறேன்!
 
எமக்காக அல்ல!
 
நம் மக்களுக்காக!
 
கட்சிக் கண்ணோட்டமோ, ஆட்சிக் கண்ணோட்டமோ அல்ல!
 
ஜனநாயக மீட்சிக் கண்ணோட்டம் முக்கியம் - மக்களே, ஏமாந்துவிடாதீர்கள்'' என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்