காய்ச்சல், மூச்சுவிட சிரமம் இருந்தால்..? – இன்ப்ளூயன்சா காய்ச்சல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
புதன், 15 மார்ச் 2023 (09:28 IST)
தமிழ்நாட்டில் இன்ப்ளூயன்சா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் பரவி வரும் இன்ப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல் தமிழகத்திலும் பரவியுள்ளது. நாடு முழுவதும் இந்த காய்ச்சலுக்கு 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். காய்ச்சலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் இன்ப்ளூயன்சா காய்ச்சல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பவர்களுக்கு இன்ப்ளூயன்சாவுக்கான ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட வேண்டும்.
காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்ட நபர்கள் 7 நாட்கள் வரை வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
லேசான காய்ச்சல், அறிகுறிகள் கொண்டவர்கள், தீவிர காய்ச்சல் அதிக இருமல் கொண்டவர்கள் என 2 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால் தீவிர காய்ச்சல், மூச்சுவிட சிரமம், நெஞ்சு வலி, ரத்த அழுத்த குறைவு உள்ளிட்ட தீவிர பாதிப்பு உள்ள சி வகையினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும்.
குழந்தைகளுக்கு தொடர் காய்ச்சல், மூச்சு விட சிரமம் இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.
வீட்டு தனிமையில் இருப்பவர்கள் 104 மற்றும் 108 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு இன்ப்ளூயன்சா காய்ச்சல் தொடர்பான சந்தேகங்கள், ஆலோசனைகளை 24 மணி நேரமும் பெறலாம்.
மருத்துவமனை ஊழியர்கள் ப்ளூ காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்கள், இணை நோய் உள்ளவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
65 வயதிற்கு மேற்பட்டவர்கள், 8 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ப்ளூ தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது.
மருத்துவமனைகளில் ஆய்வகங்கள், காய்ச்சல் பிரிவில் பணிபுரிவோர் என்95 முகக்கவசம் அணிய வேண்டும்.
இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.