மினி க்ளினிக்கில் நர்ஸ் வேலை; ஆசைக்காட்டும் மோசடி கும்பல்! – அரசு எச்சரிக்கை!

புதன், 23 டிசம்பர் 2020 (08:49 IST)
தமிழகத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள அம்மா மினி க்ளினிக்குகளில் நர்ஸ் வேலை வாங்கி தருவதாக மோசடி கும்பல் பணம் பறிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

தமிழகத்தில் 2000 அம்மா மினி க்ளினிக்குகளை சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார். இந்த மினி க்ளினிக்குகளில் ஒரு மருத்துவர், ஒரு நர்ஸ் மற்றும் ஒரு சுகாதார பணியாளர் இருப்பார் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மினி க்ளினிக்கில் நர்ஸ் வேலை வாங்கி தருவதாக பயிற்சியில் உள்ள நர்ஸுகள் உள்ளிட்ட பலரிடம் மோசடி கும்பல் சில லட்சங்களில் பணம் பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ள 2000 அம்மா மினி க்ளினிக்குகளில் நர்ஸ் பணியிடங்கள் தனியார் மூலமாக நிரப்பப்படுகின்றன. இந்த மினி க்ளினிக்குகளில் சேரும் நர்ஸுகளுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்களுக்கு அரசு நர்ஸுகளுக்கு கிடைக்கும் சலுகைகள் கிடைக்காது.

மேலும் இந்த பணியிடத்தை நிரந்தரமாக்கவோ, அரசு வேலையாக்கவோ அவர்கள் கோர முடியாது. எனவே நிரந்தரமற்ற இந்த நர்ஸ் பணிக்கு யாரும் அநாமதேய நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். யாராவது பணத்திற்கு இந்த பணியை வாங்கி தருவதாக கூறினால் தேனாம்பேட்டையில் உள்ள பொதுசுகாதாரத்துறையில் புகார் அளிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்