அரசு பள்ளிகளில் சினிமா திரையிடல்; வெளிநாடு சுற்றுலா செல்ல வாய்ப்பு! – பள்ளிக்கல்வித்துறை!

வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (12:41 IST)
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் சிறார் திரைப்பட விழா நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதற்கு சிறப்பான விமர்சனங்கள் எழுதும் மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என தமிழக அரசு முன்னதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த சிறார் திரைப்பட விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை தற்போது வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு பள்ளிகளில் உள்ள 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு திரைப்படங்கள் திரையிடப்பட வேண்டும்.

திரைப்படங்களுக்காக ஒதுக்கப்பட்ட பாடவேளைகளில் திரைப்படம் திரையிடப்பட வேண்டும். திரைப்படத்தை திரையிடுவதற்கு முன்பும், பின்பும் ஆசிரியர்கள் மாணவர்களிடம் கலந்துரையாட வேண்டும்.

எந்தெந்த படங்களை திரையிட வேண்டும் என்ற விவரங்களை கல்வித்துறை பள்ளிகளுக்கு அனுப்பும். திரைப்படங்கள் குறித்த விமர்சனத்தை மாணவர்கள் எழுத்துப்பூர்வமாக அளிப்பது கட்டாயம். பள்ளி அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவிகள் மாவட்ட, மாநில அளவில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

இதில் சிறப்பாக விளங்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்