ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகையில் இந்த ஆண்டு தோன்றியுள்ள பனி லிங்கத்தை இதுவரை 60 ஆயிரத்து 752 பக்தர்கள் தரிசித்துள்ளனர். இன்னும், 27 ஆயிரத்து 426 பேர் ஜம்மு முகாமில் காத்து இருக்கின்றனர். இதற்கிடையே மோசமான வானிலை மற்றும் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பஹல்காம் முகாமில் இருந்து நேற்று புறப்பட்ட 1798 பேரும் தற்போது உதம்பூரில் நிறுத்தி வைக்கப்பட்டு அங்குள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் நேற்று மதியம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமர்நாத் பக்தர்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், வானிலை சீரானதும் யாத்திரை தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தமிழகத்தினை சார்ந்த பக்தர்கள் நேற்று முன் தினம் (செவ்வாய் கிழமை) இரவு பத்திரமாக தமிழகத்திற்கு வந்தனர். கரூர், பரணி பார்க் பள்ளியின் முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன், உள்ளிட்ட குழுவினர் தமிழகத்திலிருந்து 8 நபர்கள் அமர்நாத் சென்றிருந்த நிலையில் இயற்கை வானிலை சீராக இல்லாத நிலையில் அமர்நாத் பனிலிங்கத்தினை தரிசிக்க சுமார் 3 நாட்கள் தாமதமானதுடன், அங்கே நடைபெற்ற நிலச்சரிவில் 11 பக்தர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்திய ராணுவத்தினர் பக்தர்களை மீட்டு, அவர்களுக்கு உரிய வசதிகளை செய்து தந்ததோடு, பனிலிங்கத்தை தரிசிக்க, ராணுவத்தினரும், ஜம்மு காஷ்மீர் போலீஸார் மற்றும் BSF வீரர்கள் பெரிதும் உதவிய நிலையில், அவர், இந்திய ராணுவத்தினருக்கு தனது நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.