வேறொரு இந்திய மொழியை கற்றுக் கொள்வதை தடுக்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான். பாலகுருசாமி

Mahendran

வெள்ளி, 21 பிப்ரவரி 2025 (10:35 IST)
இந்தியாவில் உள்ள வேறொரு மொழியை தமிழக மாணவர்கள் கற்பதற்கு தடையாய் இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்று முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்தியை திணிப்பது என்று தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் திராவிட மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு மொழியை கூட படிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தேசிய கல்விக் கொள்கை என்பது, 21ம் நுாற்றாண்டில் இந்தியாவின் கல்வித் தேவைகளை எட்டுவதற்கு விரிவான வழிகாட்டு நடைமுறைகள் கொண்டுள்ளது. இளைஞர்களுக்கு ஆற்றல் அளிக்கும் கல்வித்தரம், புதுமையாக்கம், ஆய்வு மனப்பான்மையை மேம்படுத்த, பல்வேறு நுாதன நடவடிக்கைகளை இது பரிந்துரைக்கிறது.
 
தேசிய கல்வித் திட்டம் எந்த இடத்திலும் ஹிந்தியை கட்டாய பாடமாக்கவில்லை. அரசியல் சட்டத்தில் அட்டவணை இடப்பட்டுள்ள ஏதாவது ஒரு இந்திய மொழியை, மூன்றாம் மொழியாக கற்பிக்க பரிந்துரைக்கிறது. எந்த கட்டத்திலும் ஹிந்தி திணிக்கப்படவே இல்லை.
 
திராவிட மாடல் அரசாகக் கூறிக்கொள்ளும் தமிழக அரசு, திராவிட மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் ஏதாவது ஒன்றை கற்க பரிந்துரைக்கலாம். மும்மொழித் திட்டத்தின் பாராட்டத்தக்க அம்சங்களில் ஒன்று, நாட்டில் உள்ள பல மொழிகள் கொண்ட கட்டமைப்பு சீராக இருப்பதை உறுதி செய்வதே.
 
தேசிய கல்விக் கொள்கை குறிப்பிட்ட ஒரு மொழியை கற்க வேண்டும் என்று வலியுறுத்தாவிட்டாலும், இளைஞர்களுக்கு பலன் தரக்கூடிய, நாட்டின் பல பகுதிகளில் பேசப்படும் ஹிந்தி போன்ற மொழியை நம் மாணவர்கள் ஏன் கற்கக் கூடாது.
 
இதனால், வேலைவாய்ப்பு, வர்த்தகம் சார்ந்து மாநிலங்களுக்கு இடையே பயணிக்க வசதி ஏற்படும். மத்திய அரசுப் பணிகள், ராணுவம் மற்றும் இதர சேவைகளில் ஈடுபடும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும். ஹிந்தி, அரசியல் சாசனம் அங்கீகரித்துள்ள அலுவல் மொழி என்பதையும், மத்திய அரசு அதை வணிக மொழியாக ஏற்றுள்ளதையும் நினைத்துப் பார்ப்பது பொருத்தமானது.
 
தமிழ் நீங்கலாக வேறொரு இந்திய மொழியை மாணவர்கள் கற்றுக் கொள்வதை, 60 ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்துவரும் ஒரே மாநிலம் தமிழகம்தான். இருமொழிக் கொள்கைகள் போதும் என்பதால் ஏழை, எளிய மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மொழியை கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
 
அதேசமயம், மத்திய அரசு, தனியார், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சேரும் பணக்கார, நகர்ப்புற மாணவர்கள் தாங்கள் விரும்பும் எந்த மொழியையும் கற்கும் உரிமை பெறுகிறார்கள். மும்மொழித் திட்டத்தை எதிர்ப்போரின் பேரக்குழந்தைகள், கொள்ளுப் பேரக்குழந்தைகள் ஹிந்தியை மகிழ்வோடு கற்கிறார்கள் அல்லது கற்றார்கள்.
 
பல தலைவர்கள் சி.பி.எஸ்.இ., கல்வித் திட்டத்தின்கீழ் பள்ளி நடத்துகின்றனர்; அங்கு ஹிந்தி கட்டாய மொழிப் பாடம். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு. ஓர் அரசு தனது மாநில மாணவர்கள் விரும்புவதை எப்படி மறுக்கலாம்.
 
அவர்கள் ஏழைகள், அரசுப் பள்ளிகளில்தான் படிக்க முடியும் என்ற நிலை இருப்பதாலா. மக்களை ஏமாளிகளாக்க எளிய வழியை மேற்கொள்கின்றனர். சுயலாபத்துக்காக வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் இந்த அரசியல்வாதிகளின் மாய்மாலத்துக்கு மக்கள் இரையாகி விடக்கூடாது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்