முட்டாள். இது காஷ்மீர் மற்றும் வடகிழக்குக்கானது, தமிழகத்திற்கு அல்ல என்று சிஏஏ சட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலினை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அகதிகளாக வசித்துவரும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. எனினும், அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் வங்கதேசத்தில் இருந்து குடியேறிய இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கவும் எதிர்ப்பு நிலவுகிறது.
தங்களது மாநிலத்தில் வங்காளிகள் ஆதிக்கம் அதிகரிக்கும் என அவர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில் மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் (CAA) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்தது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது என்றும் இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்பதனை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் இந்த நேரத்தில் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி முதல்வர் ஸ்டாலினின் சிஏஏ சட்டம் தொடர்பான கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், முட்டாள். இது காஷ்மீர் மற்றும் வடகிழக்குக்கானது, தமிழகத்திற்கு அல்ல என்று பதிவிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது