ஓசூரில் சர்வதேச விமான நிலையம்: சட்ட பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

Mahendran

வியாழன், 27 ஜூன் 2024 (11:20 IST)
ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆண்டுக்கு மூன்று கோடி பயணிகள் பயன்படுத்தும் வகையில் ஓசூரில் சர்வதேச தரத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று 110 விதியின் கீழ் பேசினார்.

தமிழகம் நோக்கி உலக நிறுவனங்கள் வந்து கொண்டிருப்பதாகவும் இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதாகவும் கூறிய முதல்வர் ஸ்டாலின் இந்தியாவின் முதல் ஏற்றுமதி மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்றும் இந்தியாவின் இரண்டாவது பொருளாதார மாநிலமாக இருக்கிறது என்றும் கூறினார்.

இந்த நிலையில் தமிழகத்தை முக்கிய பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு உள்கட்டமைப்பு தேவை என்றும் அதனால் தான் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பது அவசியமாக கருதப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

2000 ஏக்கரில் ஆண்டுக்கு மூன்று கோடி பயணிகள் பயன்படுத்தும் வகையில் ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்