சங்கரலிங்கனார் - வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறப்பு

சனி, 20 ஜூன் 2015 (00:03 IST)
தியாகி சங்கரலிங்கனார் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தைத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.
 

 
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 
நாட்டிற்காகப் பெரும் தொண்டாற்றிப் பல்வேறு தியாகங்களைச் செய்த தலைவர்கள் மற்றும் சான்றோர்களைச் சிறப்பிக்கும் வகையிலும், அவர்களின் தியாகங்களை வருங்காலச் சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையிலும், நினைவிடங்கள், நினைவு இல்லங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் மணிமண்டபங்களைத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சிறந்த முறையில் உருவாக்கி பராமரித்து வருகிறது.
 
நமது மாநிலத்திற்கு, சென்னை மாகாணம் என இருந்த பெயரை மாற்றித் தமிழ்நாடு எனப் பெயரிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிர் துறந்த தியாகி சங்கரலிங்கனாருக்கு விருதுநகர் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார்.
 
அதன்படி, விருதுநகரில், தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தைக் காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
 
மேலும், வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்திய சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவைப் போற்றும் வகையில் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றப் பேரவையில் அறிவித்திருந்தார்.
 
அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் - கயத்தாறில் அமைக்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
 
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் திறந்து வைக்கப்பட்ட இந்த இரு மணிமண்டபங்களின் மொத்த மதிப்பு 1 கோடியே 97 லட்சம் ரூபாய் ஆகும். 
 
இந்நிகழ்ச்சியில், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்