மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சினிமா துறையை பொறுத்தவரை, நாடு முழுவதும் திரையரங்குகள் மீது 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுபோக, தமிழக அரசுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரியாக கட்டவேண்டும். எனவே மொத்தமாக 58 சதவீத வரி மாநில மற்றும் மத்திய அரசுக்கே செல்கிறது. எனவே, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற ஜூலை 3ம் தேதி முதல், தமிழகத்தில் திரையரங்குகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதை குறைக்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் மற்றும் விஷால் ஆகியோர் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.ராஜேந்தர் “மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டியால் தமிழ் திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. ஆனால், இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் ரஜினிகாந்த் அமைதியாக இருக்கிறார். தான் சார்ந்த சினிமா துறைக்கே குரல் கொடுக்காத ரஜினிகாந்த் எப்படி அரசியலுக்கு வந்து மக்களுக்காக குரல் கொடுப்பார்?” என டி.ஆர். கேள்வி எழுப்பினார்.