பன்றி காய்ச்சலுக்கு ஒரு பெண் உயிரிழப்பு: அரியலூரில் பொதுமக்கள் பீதி

ஞாயிறு, 15 நவம்பர் 2015 (11:58 IST)
அரியலூர் அருகே பன்றி காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான்  ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் அப்பகுதி பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.
 
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த காய்ச்சலை தடுக்க மாவட்ட ஆட்சியர் சரவணவேல் ராஜ் உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பெண் ஒருவர் பன்றி காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார். செந்துறை அருகே உள்ள அகரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி செல்லம்.
38 வயதுடைய செல்லம் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து, அவர் அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
 
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பதைக் கண்டறிந்தனர்.
 
இந்நிலையில்,  திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
 
ஆயினும் பன்றிக் காய்ச்சலுக்குப் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் செல்லம் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் மேல் சிக்ச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
 
அங்கு பன்றி காய்ச்சலுக்கான தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆயினும் சிகிச்சை பலனின்றி செல்லம் இன்று காலை உயிரிழந்தார்.
 
பன்றி காய்ச்சலுக்கு ஒரு பெண் உயிரிழந்ததால் அப்பகுதி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதனால், பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்