தமிழ்நாட்டில் மாணவர் தற்கொலைகள் அதிகரிக்கிறதா? பதின்பருவ மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?

Prasanth Karthick

வெள்ளி, 11 அக்டோபர் 2024 (14:06 IST)

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

 

 

இரண்டு நாட்களுக்கு முன், சேலம் மாவட்டம் எடப்பாடியில் 19 வயது பெண், நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற முடியாததால் தற்கொலை செய்து கொண்டார். இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று தேர்வு எழுதிய அவர், துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் தான் விரும்பிய இடம் கிடைக்காததால் அவ்வாறு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள்படி, இந்தியாவில் அதிக மாணவர் தற்கொலைகள் நிகழும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

 

இந்நிலையில், மாணவர்களின் மனநலன் எவ்வாறு உள்ளது? அவர்களை அதிக மன அழுத்தத்திற்குள் தள்ளுவது எது? இவற்றைப் புரிந்துகொள்ள பிபிசி தமிழ் பல்வேறு கட்டங்களில் இருக்கும் சில மாணவர்களிடம் பேசியது.

 

“எனது கனவு வேலை எனக்குக் கிடைக்காதபோது, எனது அறையில் உட்கார்ந்து அழுதிருக்கிறேன், வெளியில் சொன்னால் என்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற அச்சம் இருந்தது.”

 

“இவ்வளவு குண்டாக இருந்தும் ஏன் நிறைய சாப்பிடுகிறாய் என்று கேட்டபோது நான்கு நாட்களுக்கு சாப்பிடவே இல்லை.”

 

“நிறைய வாய்ப்புகள் இருப்பதாலேயே என்ன செய்வதென்று தெரியாமல் பதற்றம் உருவாகிறது.”

 

“நல்ல மதிப்பெண்கள் பெறவில்லை என்றால், எனக்காகக் கஷ்டப்படும் பெற்றோர்களின் முகத்தை எப்படிப் பார்ப்பது?”

 

இவை பிபிசி தமிழிடம், தங்கள் மன அழுத்தம் குறித்து பகிர்ந்துகொண்ட மாணவர்கள் சிலரது மனநிலையின் வெளிப்பாடு.

 

இந்தியாவில் மாணவர் தற்கொலைகளில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

 

இந்தியாவில், அதிக மாணவர் தற்கொலைகள் நிகழும் மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இருக்கிறது.

 

மத்திய அரசு வெளியிட்ட தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகள் 2022இன் படி, இந்தியாவில் 13,044 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதில் தமிழ்நாட்டில் 1,416 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

 

மாணவர் தற்கொலைகள் தமிழ்நாட்டில் புதிதல்ல. நீட் தற்கொலைகள், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலைகள், பெற்றோர் திட்டியது தாளாமல் இளஞ்சிறார்கள் தற்கொலை, காதல் விவகாரத்தால் நிகழும் தற்கொலை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ப்ளூவேல் (bluewhale) ஆன்லைன் விளையாட்டின் காரணமாகத் தற்கொலை என பல்வேறு சூழல்களில் தமிழ்நாட்டு மாணவர்கள் தற்கொலை செய்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

 

தேர்வு நேர அழுத்தம், உடல் தோற்றம் குறித்த சிக்கல்கள், அடையாளச் சிக்கல்கள், உறவுச் சிக்கல்கள், வேலையின்மை குறித்த அச்சம், நிறைய வாய்ப்புகள் இருப்பதால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாத குழப்பம் எனப் பல்வேறு காரணங்களால் தாங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக பிபிசியிடம் தத்தம் அனுபவங்களைப் பகிந்துகொண்ட மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

கல்லூரி மாணவர்களை தொற்றிக் கொள்ளும் 'பிளேஸ்மென்ட்' கவலை

 

தமிழ்நாட்டில் மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் நான்கு ஆண்டு பொறியியல் படிப்பை முடித்த பெயர் குறிப்பிட விரும்பாத 22 வயது இளைஞர், “கல்லூரி இறுதி ஆண்டில் பிளேஸ்மென்ட் நேரத்தில், முதல் இரு வாரங்களில் வேலை கிடைக்காதபோது மிகுந்த வேதனையையும் மன அழுத்தத்தையும் எதிர்கொண்டதாக" தெரிவித்தார்.

 

"எனக்கு சப்ஜெக்ட் எல்லாம் தெரிந்திருந்தும்கூட, நேர்முகத் தேர்வை என்னால் ஏனோ வெற்றிகரமாகக் கடக்க முடியவில்லை. எனது கனவு வேலை கடைசி சுற்றில் கைவிட்டுப் போனபோது, எனது அறையில் தனியாக உட்கார்ந்து அழுதிருக்கிறேன். வெளியில் சொன்னால், என்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற தயக்கம் இருந்தது. என் தோல்விக்கு காரணத்தைத் தேடுகிறேன் என்று என்னைத் தவறாகப் புரிந்து கொள்வார்களோ என்று பயந்தேன். பிறகு நானே என்னை தேற்றிக் கொண்டேன்” என்று தனது மனநிலையை விவரித்தார்.

 

பிபிசியிடம் பேசிய மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர் ஒருவர் “கல்லூரியில் நுழைவதற்கு முன்பு, பொறியியல் துறையில் முன்னுக்கு வர வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். ஆனால் உள்ளே சென்ற பிறகு, டேட்டா சயின்ஸ், லாஜிஸ்டிக்ஸ், எனப் பல விதமான வாய்ப்புகள் தெரிய வந்தன.

 

 

ஆனால் எதைத் தேர்ந்தெடுக்கலாம், எது நல்லது என்று முடிவெடுக்கத் தெரியவில்லை. அதுவே ஒரு கட்டத்தில் அழுத்தமாக மாறியது” என்கிறார்.

 

வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், வேறு பாடத் திட்டங்களில் படித்தவர்கள் இந்த வாய்ப்புகள் குறித்த தகவல்களை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்ததால், அவர்களைவிடத் தான் பின்தங்கி நிற்கிறோமோ என்று பதற்றப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

 

தமிழ்நாட்டில் ஒரு முன்னணி பொறியியல் கல்லூரியில் படித்து தற்போது பணி கிடைத்துள்ள 21 வயது இளைஞர் ஒருவர், “பிரபலமான முன்னணி கல்வி நிறுவனத்தில் படிப்பதே ஒரு அழுத்தம்தான்" என்கிறார்.

 

இந்தக் கல்லூரியில் படித்தால், இந்த இடத்தில் வேலை பார்க்க வேண்டும் "என்ற சமூக எதிர்பார்ப்பு உள்ளது" எனக் குறிப்பிடும் அவர், "அதைவிடக் குறைவான ஓரிடத்தில் வேலை கிடைத்தால் நம்மை மதிப்பார்களா என்ற பயம் கடைசி ஒரு மாதத்தில் மிகத் தீவிரமாகத் தொற்றிக் கொண்டது” என்றார்.

 

கல்லூரி மாணவர்களுக்கு வேலை சார்ந்த அழுத்தம் என்றால், பள்ளி மாணவர்களுக்கு பதின்பருவ உளவியல் சிக்கல்களுடன் தேர்வு நேர அழுத்தமும் சேர்ந்து கொள்கிறது.

 

தேர்வு நேர அழுத்தம்

 

தேர்வு நேர அழுத்தம் இன்னமும் மிகச் சிக்கலானதாகவே இருப்பதாகக் கூறுகிறார் 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்ட மனநல ஆலோசகர் கீர்த்தி பை.

 

“நல்ல மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று ஒரு சில வீடுகளில் பெற்றோர்கள் கொடுக்கும் அழுத்தம், பெற்றோரை ஏமாற்றிவிடக் கூடாது என்று ஒரு சில வீடுகளில் பிள்ளைகளுக்கு இருக்கும் அழுத்தம், என்று தேர்வுகள் குறித்த பதற்றமும் அழுத்தமும் 8ஆம் வகுப்பு முதலே தொடங்குகிறது. நீட் பயிற்சி பெறும் தனது பிள்ளை, அந்தப் பயிற்சி வகுப்புகளுக்குப் போகாத பிள்ளைகளுடன் சேரக்கூடாது எனச் சில பெற்றோர்கள் நினைக்கிறார்கள்” என்கிறார்.

 

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த 48 வயதான 11ஆம் வகுப்பு மாணவியின் தாய், “தினமும் வீட்டுக்கு வந்தவுடன், காபி குடித்துவிட்டு தன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொள்வாள். இரவு வெகு நேரம் விழித்திருந்து படிக்கிறாள். சாப்பிடும் நேரத்திலும்கூட யாருடனும் சரியாகப் பேசுவதில்லை. நான் கண்டிப்பாக எம்பிபிஎஸ் படிப்பேன் என்று மட்டும் அடிக்கடி சொல்வாள். அதை நினைத்துப் பெருமைப்படுவதா, அல்லது பயப்படுவதா என்று தெரியவில்லை” என்கிறார்.

 

சென்னையில் உள்ள மூத்த மனநல மருத்துவர் ஹேமா தரூர், “13 முதல் 18 வயதிலான சிறார்களுக்குத் தன்னம்பிக்கை சார்ந்த அடையாளச் சிக்கல்கள் எழுகின்றன. பிறகு உடல் தோற்றம் சார்ந்த அழுத்தம் எழுகிறது. உடனடித் தீர்வு வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். அது இல்லாதபோது, விரக்தி அடைந்து, அந்தச் சூழலைவிட உயிரைவிடுவதே பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்குச் செல்கிறார்கள்” என்கிறார்.

 

மேலும், “ஆன்லைனில் விளையாடுவது மட்டுமல்ல, அதிலேயே தங்களுக்கென ஒரு வட்டத்தையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். தகவல்கள் சரியானதா என்பதை சமூக ஊடங்கங்கள் மூலம் உறுதி செய்துகொள்கிறார்கள். பெற்றோர்களிடம் எதுவும் பேசுவதில்லை.

 

இதற்கு அடுத்த கட்டமாக, 21 வயது முதல் 30 வயதுக்குள் ஒரு நல்ல சம்பாத்தியம் கிடைக்கவில்லை என்றாலும் அழுத்தம் ஏற்படுகிறது. பிறகு தோற்றுவிட்டோம் என்ற எண்ணம் தோன்றும். ஒரே இடத்தில் சிக்கிக் கொண்டது போலத் தோன்றும்," என்று தெரிவித்தார்.

 

இது Chronic amotivation syndrome என்று மனநல மருத்துவத்தில் அழைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மாணவர் தற்கொலைகளைத் தடுக்க மாநில அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அறிந்துகொள்ள மாநில பள்ளிக்கல்வித் துறையிடம் பிபிசி தமிழ் பேசியது.

 

தமிழ்நாடு அரசின் 104 எனும் அவசர உதவி எண் சேவை மூலம், பொதுத் தேர்வு, நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்களைத் தொடர்புக் கொண்டு அவர்களுக்கு ஊக்கமும் ஆதரவும் வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை பிபிசி தமிழிடம் தெரிவித்தது.

 

மேலும், "கல்லூரி வளாகங்களில் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக, மருத்துவக் கல்லூரிகளில் மனநல ஆதரவு மன்றங்கள் தொடங்கப்பட்டு இயங்கி வருகின்றன. மாணவர்களுக்கான முதல்கட்ட மனநல அறிவுரைகளை வழங்குவதற்கான பயிற்சியை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்கும் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன," என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Gen Z தலைமுறையினர் என்ன நினைக்கிறார்கள்?
 

பதின்பருவத்தினரிடம் காணப்படும் மன அழுத்தத்துக்கு உடல் தோற்றம் குறித்த சிக்கல்கள் மற்றொரு காரணம் என்கிறார் மனநல ஆலோசகர் கீர்த்தி பை.

 

“கொரியன் கே ட்ராமாக்களின் தாக்கம் காரணமாகப் பலரும் மிக ஒல்லியாக இருக்க வேண்டும் என்று உணவை மிகவும் குறைத்துக் கொள்கின்றனர். இது அனோரெக்சியா (anorexia) எனப்படும்.

 

இதனால் பலரும் நொடிந்து போனதைப் போல் இருக்கிறார்கள். ஒவ்வொரு நொடியும், தன்னை அருகில் இருப்பவர்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்ற எண்ணத்திலேயே இருப்பார்கள்” என்றார்.

 

இதற்கிடையே உடல் தோற்றம் குறித்த குடும்பத்தினர் மற்றும் மற்றவர்களின் கருத்துகளும் பதின்பருவத்தினரை வெகுவாகப் பாதிக்கிறது.

 

எடையைக் குறைத்தால்தான் புதிய ஆடைகள் வாங்கித் தருவதாக பெற்றோர் கூறினர் என்று தனது தோழிக்கு நேர்ந்ததை தனியார் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் அனாமிகா கூறுகிறார்.

 

“அவள் வீட்டில் ஒரு நாள் சாப்பிடும்போது, இவ்வளவு குண்டாக இருக்கிறாய், இவ்வளவு ஏன் சாப்பிடுகிறாய் என்று பெற்றோர் திட்டினர். அதன் பிறகு நான்கு நாட்கள் அவள் சாப்பிடவே இல்லை, சாப்பாட்டைப் பார்த்தாலே அழ ஆரம்பித்துவிடுவாள்” என்றார்.

 

பல விதமான உறவுச் சிக்கல்களில் பள்ளி மாணவர்கள் சிக்கித் தவிக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன. சென்னையில் கடந்த மாதம் பள்ளி மாணவர்கள் இருவர் கைகளைக் கட்டிக் கொண்டு கடலில் இறங்கி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்தது.

 

ஜென் சி தலைமுறையினர் மத்தியிலுள்ள பல்வேறு உறவுமுறைகளை பெற்றோர்கள், ஆசிரியர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை என்கிறார் மனநல ஆலோசகரும் க்ரைஸ் பல்கலைக்கழகத்தின் ஆசிரியருமான ஆர்.அர்ச்சனா.

 

GenZ தலைமுறையினர் மத்தியிலுள்ள சில உறவுகளை தனியார் கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் அனாமிகா விளக்கினார்.

 

“தற்போதுள்ள நபருடன் உறவு தொடராத பட்சத்தில் இரண்டாவதாக ஒருவரைப் பார்த்து வைத்துக்கொள்வது பென்ச்சிங் (benching) எனப்படும்."
 

"காதலர்கள் போல் எல்லாம் செய்வார்கள், ஆனால் காதலை கூறிக் கொள்ளாமல் பெஸ்ட் ப்ரெண்ட்ஸாகவே இருப்பது டெலூஷன்ஷிப் (delusionship)."
 

"எந்தவொரு உறுதியும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட சூழலில் மட்டுமே உறவில் இருப்பது situationship எனப்படும்."
 

"தன்னுடன் தொடர்ந்து இருக்கும் ஒருவர், இரண்டு மாதங்கள் தொடர்பில்லாமல் சென்றுவிட்டுப் பிறகு மீண்டும் பேசுவது ghosting."
 

"தங்கள் பெற்றோருக்கு எதுவும் தெரியாது என்றே நினைக்கிறார்கள். பூப்படைந்தவுடன் தாங்கள் பெரியவர்களாகிவிட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள்," என்று பதின்பருவத்தினரின் மனநிலையை விளக்குகிறார் அர்ச்சனா.

 

மேலும், “பதின்பருவம் என்ற நிலையை அவர்கள் அங்கீகரிப்பதில்லை. தங்களுக்கு என இருக்கும் ஒரு குழுவுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள். இதுபோன்ற உறவுகளில் இல்லையென்றால் தாங்கள் டிரெண்டில் இல்லை என்று மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அவர்களுடன் எளிதாக உரையாட அவர்களின் மொழி தெரிந்திருக்க வேண்டும்” என்கிறார் அவர்.

 

தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் அனாமிகா, “எனது கல்லூரியில் பலர் தங்கள் நிலைமைகளைப் பகிர்ந்துகொள்ள நல்ல நண்பர் இல்லை என்று வருத்தப்படுவதைப் பார்த்திருக்கிறேன்,” என்கிறார்.

 

பெற்றோர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாதா என்று கேட்டதற்கு, “பெற்றோர்கள் அந்த நேரத்தில் காது கொடுத்துக் கேட்கலாம், ஆனால் மற்றொரு தருணத்தில் அதையே குத்திக்காட்டிப் பேசுவார்கள் என்ற பயம் இருப்பதாக” கூறுகிறார்.

 

பெற்றோர்கள் பிள்ளைகளுடன் மனம் திறந்து பேசுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று மன நல மருத்துவர் ஹேமா தரூர் கூறுகிறார்.

 

அதோடு, “Gen Z தலைமுறையினர் யோசிக்கும் விதம், எதிர்வினையாற்றும் விதம் பெற்றோருக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால் அவர்களுடன் உரையாடலைத் தொடங்க வேண்டும். அப்போதுதான் பிள்ளைகள் வாய் திறப்பார்கள்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

மேலும், மனநல ஆலோசகரையோ மருத்துவரையோ அணுகுவதை வெட்கப்படக்கூடிய ஒரு விஷயமாகக் கருத வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறார்.

 

முக்கியத் தகவல்
 

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

 

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணிநேரம்)

 

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணிநேரம்)

 

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்