மனிதாபிமானம் கூடவா இல்ல? இலங்கை தமிழர் வழக்கில் உச்சநீதிமன்றம் கறார்! திருமாவளவன் வேதனை!

Prasanth Karthick

செவ்வாய், 20 மே 2025 (09:16 IST)

இலங்கையிலிருந்து தப்பி வந்த சுபாஸ்கரன் என்பவர் இந்தியாவில் வாழ்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்த விவகாரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் செயல்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் சுபாஸ்கரன். சட்டவிரோத தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்ட இவருக்கு கடந்த 2018ம் ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. 7 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பிறகு அவர் மீண்டும் இலங்கைக்கு சென்றுவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இந்நிலையில் சிறை தண்டனை முடிந்த பிறகு இந்தியாவிலேயே வாழ அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சுபாஸ்கரன் மேல்முறையீடு செய்தார். தான் முன்னாள் புலிகள் என்பதால் இலங்கையில் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும், தனது குடும்பம் இங்கே செட்டில் ஆகி விட்டதால் தானும் இங்கே இருக்க அனுமதிக்கும்படி கேட்டிருந்தார்.

 

இதற்கு பதிலளித்த உச்சநீதிமன்றம், வேறு நாடுகளில் இருந்து மக்கள் வந்து குடியேற இந்தியா ஒன்றும் சத்திரம் கிடையாது என்றும், இங்கே குடியேற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்றும் கேள்விகளை எழுப்பியது. மேலும் மனுதாரர் இலங்கை செல்ல விரும்பாவிட்டால் வேறு நாடுகளிடம் உதவி கேட்கலாம், இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும் என்ற உத்தரவை மாற்ற முடியாது என கறாராக கூறிவிட்டது.

 

இந்த வழக்குக் குறித்து வேதனை தெரிவித்து பேசியுள்ள விசிக தலைவர் திருமாவளவன் “அகதிகளாக தஞ்சம் புகுவோருக்கு அடைக்கலம் கொடுப்பது மனிதாபிமான அடிப்படையில் ஒரு தேசத்தின் கடமை. இந்தியா என்ன சத்திரமா? என உச்சநீதிமன்றம் பேசியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இலங்கை தமிழர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மனிதநேய மாண்பை உடைப்பது போல உள்ளது” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்