1997 முதல் 2000 வரை, வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ரூ.1.55 கோடி பெற்றதாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எல்.ஏ. எம்.எச். ஜவாஹிருல்லாவுக்கும், அவரது நெருங்கியரான ஹைதர் அலிக்கும் எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை 2011-ல் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து, இருவருக்கும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து 2017-ல் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
தொடர்ந்து, ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உயர்நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் செல்லுபடியாக இருப்பதாக கருதி தண்டனையை உறுதி செய்தது.
இதனை எதிர்த்து இருவரும் மார்ச் 14ஆம் தேதி, சிறையில் சேர்வதை தற்காலிகமாக தவிர்த்து, மேல்முறையீடு செய்ய ஒரு மாத அவகாசம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நீதிபதி கோட்டீஸ்வர் சிங் விசாரித்து, மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வரும் வரை, ஜவாஹிருல்லா மற்றும் ஹைதர் அலிக்கு சரணடைய தற்காலிக அவகாசமாக மேலும் ஒரு மாதம் இடைக்கால நிவாரணம் வழங்கினார்.