ஆட்சியை கலைக்க மோடியை வலியுறுத்தும் சுப்பிரமணியன் சுவாமி!

வியாழன், 6 ஜூலை 2017 (09:37 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் நிலவி வந்த குழப்பங்கள் காரணமாக தமிழக அரசு நிலைக்குமா, கலைக்கப்படுமா என்ற சந்தேகம் நிலவி வந்தது. ஆனால் தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வரும் காங்கிரஸ் தலைமையிலான அரசை கலைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


 
 
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டதில் இருந்து அவருக்கு நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் பணிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில் நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் ஆளுநர் கிரன் பேடியின் செயல்பாடு விமர்சிக்கப்பட்டு வருகிறது.
 
அதுமட்டுமல்லாமல் கிரண் பேடியின் நடவடிக்கைகள் மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதாக உள்ளதால் புதுச்சேரி சட்டசபையில் அவரை பதவி நீக்கம் செய்ய முதல்வர் நாராயணசாமி தீர்மானமே நிறைவேற்றினார்.
 
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அதற்கு பதில் அளிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார். திருச்சியில் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
 
இந்த சந்திப்பின் போது பேசிய அவர், பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துவதாகச் சொல்வது தவறானது. அப்படி எந்த மாநிலத்தின் மீதும் பாஜக ஆளுமை செலுத்தவில்லை. தமிழகத்தில், ஆளும் அதிமுக அரசுக்குப் பெரும்பான்மை இருப்பதால், இந்த அரசுக்கு ஆபத்து எதுவும் கிடையாது.
 
புதுச்சேரி மாநிலத்தின் முதல்வரான நாராயணசாமிக்குச் சட்டம் தெரியவில்லை. துணைநிலை ஆளுநரைப் பதவி நீக்கம் செய்ய தீர்மானம் நிறைவேற்றியது தவறான செயல். சட்டத்துக்குப் புறம்பான முறையில் புதுச்சேரி மாநிலத்தில் செயல்பட்டு வரக்கூடிய காங்கிரஸ் ஆட்சியை, பிரதமர் மோடி உடனடியாகக் கலைக்க வேண்டும் என கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்