மூன்றாவது நாளாக தொடரும் மாணவர்கள் போராட்டம்: ஜல்லிக்கட்டு போல மாறுமா?

புதன், 6 செப்டம்பர் 2017 (11:42 IST)
நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவி அனிதாவின் தற்கொலை மரணத்தையடுத்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அனிதாவின் மரணம் தமிழக மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


 
 
அனிதாவின் மரணத்துக்கு நீட் தேர்வு தான் காரணம், அந்த நீட் தேர்வை தமிழகத்தில் அனுமதிக்ககூடாது என தமிழக பள்ளி, கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள் வீதியில் இறங்கி போராட ஆரம்பித்துள்ளனர். இந்த போராட்டங்கள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடந்து வருகிறது.
 
திருவாரூரில் கடந்த மூன்று நாட்களாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை முதல் திருவாரூர் திருநெய்ப்போர் பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
 
நாமக்கல் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூரில் கந்தசாமி கல்லூரி, கிருஷ்ணசாமி கல்லூரி மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் கல்லூரி மாணவர்கள் நேற்று முதல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் நேற்று காலை முதல் கல்லூரியின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாயில் கருப்பு துணி கட்டி போராடி வருகின்றனர். இன்று காலை முதல் நியூ கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டங்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டம் போல உருமாறி வருவதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்