தீ வைக்கும் புதுக்கலையை போலீசாருக்கு கற்று கொடுத்த தமிழக அரசு: மு.க.ஸ்டாலின்

புதன், 5 ஜூலை 2017 (04:34 IST)
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த 1-ம் தேதி ஓஎன்ஜிசியின் குழாய் வெடித்ததால் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு அந்த கிராம மக்கள் அதிர்ச்சியில் ஆழ்த்த, உடனே போராட்டத்தில் இறங்கினர். இதனையடுத்து, தீவைப்புச் சம்பவங்கள், போலீஸ் தடியடி என கதிராமங்கலமே கலவர பூமியானது. 



 
 
இதுகுறித்து நேற்று தமிழக சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கேள்வி எழுப்பினர். 'பொதுமக்கள் போலீஸைத் தாக்கியதாலும், வைக்கோல் போருக்கு தீ வைத்ததாலும் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கழக அதிகாரிகளைச் செல்லவிடாமல் தடுத்ததாலும்' கைது செய்யப்பட்டார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்
 
முதல்வரின் விளக்கத்தை அடுத்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
'தீ வைப்பது, இப்போதைக்கு தமிழக காவல்துறையில் உள்ள சில போலீஸ் அதிகாரிகளின்  'டிரெண்ட்' ஆகிவிட்டது. ஏதாவது போராட்டம் என்றால், ’எங்காவது தீ வைத்துவிட்டு, உடனே போராட்டக்காரர்கள் மீது பழிசுமத்தி, தடியடி நடத்தும் புதுக்கலையை அ.தி.மு.க. அரசு போலீஸ் அதிகாரிகளுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறதோ’ என்றே சந்தேகிக்க வேண்டியதிருக்கிறது. 
 
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் போலீஸாரே 'தீ வைத்த' காட்சிகளைப் பார்த்த மக்களுக்கு, கதிராமங்கலத்தில் உள்ள "வைக்கோல் போரில் போராட்டக்காரர்கள் தீ வைத்தார்கள்” என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கவில்லை என்றாலும், இதுபோன்ற அபாண்டமான குற்றச்சாட்டுகளை அப்பாவி விவசாயிகள் மீது முதலமைச்சர் சுமத்தியிருப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்' 
 

வெப்துனியாவைப் படிக்கவும்