டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்கள் பிரச்சினைகளை பற்றி எதுவும் பேசாமல், தனது கட்சி பிரச்சினைகளுக்கு பஞ்சாயத்து பேசவே டெல்லிக்கு போயிருக்கிறார் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் தெரிவித்த கருத்துகளின் சுருக்கம்:
“தமிழகமெங்கும் தன்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. இதை பற்றி அவர் அங்கு எதுவும் பேசவில்லை. ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகை, மத்திய அரசால் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதி, உள்ளாட்சி நிதி, மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை நிதி என்று மத்திய அரசால் தமிழகத்திற்கு வர வேண்டிய தொகை சுமார் 17 ஆயிரத்து 350 கோடி ரூபாய். அதை பற்றி அவர் வாயே திறக்கவில்லை.
தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கம் அளிக்க சொல்லி சட்டசபயில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதல் வாங்குவது குறித்தும் அவர் பேசவில்லை. இப்படியாக தமிழக மக்களின் அடிப்படை பிரச்சினைகள் எதை பற்றியும் பேசாமல் தான் ஏற்கனவே வைத்திருந்த மனுவை மீண்டும் வெட்டி ஒட்டி 29 கோரிக்கைகள் கொண்ட மனுவை கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் முதல்வர்.