நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக பயங்கரமான பின்னடைவை சந்தித்துள்ளது. மேலும் 22 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக ஓரளவு வெற்றி பெற்றிருந்தாலும், முன்னர் இருந்த செல்வாக்கு இப்போது குறைந்துவிட்டதை காட்டுவதாகவே தேர்தல் முடிவுகள் இருந்தன. இது ஒருபக்கமிருக்க அதிமுகவுக்குள்ளேயே உட்கட்சி பூசல்களும் உருவாக ஆரம்பித்துவிட்டன.
தற்போது எடப்பாடி பழனிசாமி தன் பதவியை தக்கவைத்து கொள்வதோடு மட்டுமல்லாமல், அதிமுகவை பலப்படுத்த வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. எதிர்கட்சி திமுகவோ வலிமையான தலைமையையும், சரியான கட்டுபாடையும் கொண்டிருப்பதால் எப்போது வேண்டுமானாலும் அதிமுக வை கலைத்து போட்டுவிட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதிமுக முக்கியஸ்தர்கள் சிலரே திமுகவுக்கு கட்சி மாற தயாராய் இருப்பதாய் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரபல அரசியல் சாணக்கியரான பிரஷாந்த் கிஷோரை சந்தித்து ஆலோசனை பெறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரஷாந்த் கிஷோர் மிகப்பெரும் அரசியல் விமர்சகர் ஆவார். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கட்சிகளையும் இன்ச் பை இன்ச் தெரிந்து வைத்திருப்பவர். 2014 மக்களவை தேர்தலின் போது மோடியையும், அவரது திட்டங்களையும் இந்தியாவெங்கும் கொண்டு செல்ல அரசியல் வியூகம் வகுத்து கொடுத்தவர்தான் இந்த பிரஷாந்த் கிஷோர். தற்போது ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு முக்கிய ஆலோசகராய் இருந்து வழிநடத்தியவரும் இதே பிரஷாந்த் கிஷோர்தான்.
ஜனதா தள் அமைப்பை சேர்ந்தவராய் இருந்தாலும் அனைத்து கட்சிகளிடமும் செல்வாக்கு பெற்றுள்ளவர் இவர். எடப்பாடி பழனிசாமி பிரஷாந்த் கிஷோர் ஆலோசனைகளை பெறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது எடப்பாடியார் டெல்லி சென்றிருப்பது அவரை சந்திக்கவும்தானோ என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.