குரல்வளையை நெறிக்கும் கடனில் தமிழக அரசு! இதோ பட்டியல்

வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (13:52 IST)
ஒவ்வொரு வருடமும் தமிழக அரசின் கடன் தொகை ஏறிக்கொண்டே செல்வது இயல்பாகிவிட்டது.
 
2006ம் ஆண்டு 57 ஆயிரம் கோடியாக இருந்த தமிழகத்தின் கடன் தொகை கடந்த 13 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் படுவேகமாக அதிகரித்து இப்போது 4 லட்சம் கோடியை நெருங்கிவிட்டது.  
 
நடப்பாண்டு தமிழக அரசின் கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக உள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழக அரசு 43 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளது. 
 
31.3.2006 அன்று ஜெயலலிதா ஆட்சி நிறைவு செய்த போது  தமிழக அரசின் கடன் ரூ.57,457 கோடியாக இருந்தது. அதன் பின்னர் 2006ம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி அமைத்தது. 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடிவடையும் போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழக அரசின் கடன் ரூ.1,01,439 கோடியாக அதிகரித்தது.
 
2011ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தின் முதல்வரானார் ஜெயலலிதா.  2011ஆம் தமிழகத்தின் கடன் ரூ.1,14,470 கோடியாக இருந்தது. இது 2014ஆம் ஆண்டில்  ரூ.1,71,490 கோடியாக அதிகரித்தது. அதன்பின் 2015-ல்  கடன் ரூ.1,95,290 கோடியாகவும் அதிகரித்தது. 2015-16ஆம் ஆண்டில் தமிழகத்தின் கடனானது ரூ.2,11,483 கோடி என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அப்போது தெரிவித்தார்.
 
கடந்த 2016-17ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 2017 மார்ச் மாத முடிவில் தமிழக அரசின் மொத்த கடன் நிலுவை ரூ 2,47,031 கோடியாக இருக்கும் என்று அறிவித்தார். 
 
2017-18ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழக அரசின் மொத்த கடன் 3,14,366 கோடி ரூபாயாக உயர்ந்தது. கடந்த. 2018-19ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது  தமிழக அரசின் கடன் ரூ. 3,55,845 கோடியாக இருந்தது. இப்போது தமிழகத்தின் கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
 
தமிழக அரசு கடன் வாங்கி  வட்டி கட்டி வருகிறது.  2011-12-ம் நிதி ஆண்டு திட்ட மதிப்பீட்டில் ரூ.9,233.40 கோடி வட்டி செலுத்திய தமிழக அரசு . இது 2012-13-ல் ரூ.10,835.84 கோடி அதிகரித்தது, 2013-14-ல்  ரூ.13,129.77 கோடியாகவும் 2014-15-ல் ரூ.15,890.18 கோடியாக உயர்ந்தது. 2015-16-ல் ரூ.17,856.65 கோடி ரூபாய் வட்டியம், 2016-17-ல் ரூ.19,999.45 கோடி ரூபாய் வட்டியும், இப்போது ரூ. 20 ஆயிரம் கோடிக்கு மேல் வட்டியும் தமிழக அரசு கட்டி வருகிறது. 
 
வருவாயை பெருக்க வேளாண்மை, தொழில்துறை, ஆகியவற்றில் நடவடிக்கை எடுக்காமல் டாஸ்மாக் வருமானத்தை நம்புவதே  அரசின் கடனுக்கு காரணமாக கூறப்படுகிறது. அதேபோல் இலவசம் மற்றும் சமூக நல திட்டங்களுக்காகவே அரசின் கடன் தொகையில் பெரும்பால தொகை செலவாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்