எத்தனை திவாகரன் வந்தாலும் தினகரனை அசைக்க முடியாது - செந்தில் பாலாஜி பேட்டி

சனி, 5 மே 2018 (17:28 IST)
தமிழக அளவில் மூன்று முக்கிய பிரதான சட்டவிரோத செயல்கள் கரூர் மாவட்டத்தில் அரங்கேறி வருகின்றது என முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கழக அமைப்பு செயலாளருமான வி.செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். 

 
கரூர் மத்திய நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம், கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கரூர் மத்திய நகர செயலாளர் கோல்டு ஸ்பாட் ஆர்.எஸ்.ராஜா தலைமையில், நடைபெற்ற இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கழக அமைப்பு செயலாளருமான வி.செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.
 
தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசின் தலையீட்டில் நடைபெற்று வரும், அனைத்து விரோத செயல்களுக்கும், காவிரி மேலாண்மை வாரியம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் உள்ளிட்டவைகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில், துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பல்வேறு அறப்போராட்டங்களை நடத்தி வருகின்றதாகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி பொறுப்பேற்று, இயக்கத்தையும் சிறப்பாக வழி நடத்தும் எங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தினை எப்படியாவது முடக்க வேண்டும் என்று டி.டி.வி தினகரனின் உறவினர்களை தற்போது எடப்பாடி பழனிச்சாமி சீண்டி அதன் மூலம், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்திற்கும், அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் திவாகரன் போன்றவர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மறைமுகமாக இயக்கிய நிலையில், தற்போது அனைத்தும் தெரிந்த பிறகு நேரிடையாகவே, இயக்குகின்றார் என்றார். 
 
மேலும் ஒரு திவாகரன் அல்ல, ஒராயிரம் திவாகரன் வந்தாலும், ஒரு பழனிச்சாமி அல்ல, ஒராயிரும் பழனிச்சாமி வந்தாலும் சரி, வருகின்ற தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் வெற்றி பெறுவதோடு, டி.டி.வி தினகரன் முதல்வராவதை யாராலும், தடுக்க முடியாது என்றார். 
 
கரூர் மாவட்டத்தில் மதுபானக்கடைகளின் சந்துக்கடைகள், திருட்டு மணல் லாரிகளில் ஜே.சி.பி மூலம் கடத்துவது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை என்று மூன்று சட்டவிரோத தொழில்கள் தமிழக அளவில் அரங்கேறி வருவதாகவும், இதை நான் அடிக்கடி கூட்டத்தில் சுட்டிக்காட்டி வருவதாகவும், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மற்றும் காவல்துறையினர் இது குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீண்டும் ஆட்சி மாற்றம் வந்து டி.டி.வி தினகரன் முதல்வராக வரும் போது, சட்டவிரோதமாக அரசை ஏமாற்றி, நேர்மையான அவர்களின் செயல்களை செய்யாமல், அதற்கு மாற்றாக சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, ஏமாற்றிய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மேடையில் பேசினார்.
சி.ஆனந்த குமார் - கரூர் செய்தியாளர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்