வெளிமாநிலத்தவருக்கு இடம் கொடுக்கக் கூடாது – சீர்காழியில் பரபரப்பைக் கிளப்பிய போஸ்டர் !

வியாழன், 12 செப்டம்பர் 2019 (13:27 IST)
சீர்காழி நகரில் பிழைக்க வந்த மார்வாடிகள் மற்றும் சில வெளிமாநிலத்தவர்கள் அனைத்துத் தொழில்களிலும் ஆதிக்கம் செலுத்துவதால் இனி சீர்காழியில் வெளிமாநிலத்தவர்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்ற நோட்டீஸால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீர்காழி நகர் சம்மந்தப்பட்ட போஸ்டர் ஒன்று இன்று சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பைக் கிளப்பியது. சம்மந்தப்பட்ட அந்த போஸ்டரில் கீழ்வருமாறு குறிப்பிடப்பட்டு இருந்ததே அந்த பரபரப்புகளுக்குக் காரணம்.

’சீர்காழி நகரில் அடகு வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தி வந்த மார்வாடிகள் மற்றும் வெளிமாநிலத்தவர் இன்று அனைத்து தொழில்களிலும் ஜவுளி, வாகன உதிரிபாகங்கள், மின் பொருட்கள், உணவுத் தொழில், கல்வி நிலையங்கள், நிதி நிறுவனம், விவசாய நிலம் வாங்குதல் என அனைத்து தொழில்களிலும் தங்களை நிலை நிறுத்திக் கொண்டுவிட்டனர். இனியும் இவர்களை நாம் அனுமதித்தோம் என்றால் நம் நில இழப்பு என்பது தாயக இழப்பாகும். எனவே நம் மண்ணை விட்டு அகலும் நிலை ஏற்படும்.

மேலும் சீர்காழி வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தையும் குடும்பத்தையும் காத்திட சீர்காழி நகரில் வெளிமாநிலத்தாருக்கு கடையோ, வீடோ, விற்பனைக்கோ, வாடகைக்கோ கொடுக்கமாட்டோம் என்று சீர்காழி நகர பகுதி மக்களும், சீர்காழி வர்த்தகர் நல சங்கமும் உறுதியேற்போம். மேலும் வெளிமாநிலத்தார் கடைகளிலும் நிறுவனங்களிலும் நம் மக்கள் எந்த வித வர்த்தகமும் செய்ய மாட்டோம் என்றும் உறுதியேற்போம்’ என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்