கொரோனா பீதியால் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாது 21 நாட்களை முடக்குவது பட்டினிச்சாவுக்கே வழிவகுக்கும் என சீமான் எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...
ஒவ்வொரு நாளும் மத்திய, மாநில அரசாங்கத்தால் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிக்கையிலுள்ள புள்ளிவிபரங்களே சமூகப்பரவல் நாடு முழுமையும் தொடங்கிவிட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது. பிரதமர் நரேந்திர மோடி நோய்த்தொற்று அதிகமானால் சமாளிக்கும் திறன் இந்தியாவிடமில்லை என்பதை ஒப்புக்கொண்டு சமூகப்பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அடுத்து வரும் 21 நாட்களுக்கு நாடு முழுமைக்கும் வரலாறு காணாத ஊரடங்கு உத்தரவுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.
காலம் தாழ்த்தி பிறப்பித்திருந்தாலும் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு யாரும் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாதபடி தடை உத்தரவை வெளியிட்டது மிகச்சரியான நடவடிக்கைதான். ஆனால், இந்த 21 நாட்களுக்கும் நாட்டிலுள்ள வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பங்கள், அன்றாடம் தினக்கூலி வேலைக்குச் செல்லும் அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு, குறு தொழில்முனைவோர்கள், வீடுகளற்று வீதிகளில் வாழும் இலட்சக்கணக்கான மக்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதவற்ற முதியவர்கள், மனநலம் குன்றியவர்கள், வாழ வழியின்றிப் பிச்சை எடுத்து உண்ணும் இலட்சக்கணக்கானோர் உள்ளிட்ட பலகோடிக்கணக்கான ஏழை , எளிய மக்கள் வாழும் நாட்டில் அவர்களின் தினசரி உணவு மற்றும் இதர அத்தியாவசியத் தேவைகளை வழங்குவது குறித்தோ அல்லது அதை வாங்குவதற்குத் தேவையான நிதியை வழங்குவது குறித்தோ தனது அறிவிப்பில் எதுவும் வெளியிடாதது மிகுந்த ஏமாற்றத்திற்குரியது.
மக்கள் எவ்வித முன்னேற்பாடுகளும் செய்து கொள்ள முடியாதவாறு திடீரென்று ஒரே இரவில் முன்பு பணமதிப்பிழப்பை அறிவித்தது போல, தற்போது இரவு 8 மணிக்கு மேலறிவித்து இரவு 12 மணியிலிருந்து ஊரடங்கு நாடு முழுவதும் கிராமம் கிராமமாக அமல்படுத்தப்படும் என்பது அதிர்ச்சிக்குரியதென்றாலும் அதனைச் சமாளிக்கும் எந்தவொரு சிறப்புப்பொருளாதார உதவி திட்டங்களையும் அறிவிக்காமல் பிரதமர் தன்னுடையப் பேச்சை முடித்துக்கொண்டது கடும் கண்டனத்திற்குரியது.
இந்த மிக நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டுமக்கள் நோய்த்தொற்றிலிருந்து தப்பித்து வறுமையில் சிக்கி உயிரிழந்திடா வண்ணம் காக்கும் பொருட்டு மக்களுக்கு உயிர்வாழத் தேவையான அன்றாட அத்தியாவசிய உதவிகளை உடனடியாக வழங்கிடவும், உறைவிடமற்ற மக்களுக்குச் சுகாதாரமான தற்காலிக முகாம்கள் அமைத்து பாதுகாத்து நோய்ப்பரவல் மேலும் தொற்றாமல் தடுத்திடவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.