இது மிகத்தவறான நிர்வாக முடிவு - தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்!

புதன், 19 மே 2021 (14:10 IST)
பள்ளிக்கல்வி இயக்குனரகத்தை ரத்து செய்து, ஆணையமாக மாற்ற முடிவெடுத்திருப்பது தவறு என சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

 
தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்குனரகம் ஆணையமாக மாற்றப்படுவது குறித்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள் இடையே அதிருப்தி நிலவுவதாக தெரிகிறது.
 
இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்குனரகத்தை ரத்து செய்து, ஆணையமாக மாற்ற முடிவெடுத்திருப்பது பள்ளிக்கல்வித்துறையின் நலனைப் பாதிக்கும் மிகத்தவறான நிர்வாக முடிவு என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
 
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பள்ளிக்கல்வி இயக்குனர் பொறுப்பை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாக அவரது பொறுப்புகளை பள்ளிக்கல்வி ஆணையரே மேற்கொள்வார் என்பது ஏற்கத்தக்கதல்ல. பள்ளிக்கல்வி ஆணையர் பதவி என்பது ஐ.ஏ.எஸ். படித்த நிர்வாக அதிகாரிகளுக்கானது. அவர்களுக்கு பள்ளிக்கல்வி முறைமை குறித்தும், பள்ளி ஆசிரியர்களின் சிக்கல்கள், மாணவ மாணவியரின் தேவைகள், பாடத்திட்டச் சிக்கல்கள் குறித்த அடிப்படை அனுபவ அறிவும், நடைமுறைச்சிக்கல்கள் சார்ந்த தீர்வுகள் எடுக்கும் திறனும் இருக்கும் என எதிர்பார்ப்பது தவறானது.
 
எனவே, பள்ளிக்கல்வி இயக்குனரகத்தை மூடிவிட்டு அதை ஆணையமாக மாற்றும் தமிழக அரசின் முடிவு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கல்வியாளர்கள் அச்சப்படுவது முழுக்க முழுக்க நியாயமானது. ஆகவே, மாணவர்கள், ஆசிரியர்களின் நலனை மனதிற்கொண்டு பள்ளிக்கல்வி இயக்குனரகத்தை ஆணையமாக மாற்றும் முடிவைக் கைவிட்டு, ஏற்கனவே நடைமுறையிலிருந்த பழைய முறையையே பின்பற்ற வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்