அதிமுகவுக்கு ஓட்டு போட சொல்லும் சசிகலா புஷ்பா!

செவ்வாய், 15 நவம்பர் 2016 (12:34 IST)
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா நடைபெற உள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்து பெற வைக்க வீடியோ பதிவு மூலமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிமுக தலைமை தன்னை தாக்கியதாகவும், பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்துவதாகவும் மாநிலங்களவையில் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் சசிகலா புஷ்பா. இதனை தொடர்ந்து அதிமுகவுக்கு எதிராக பல புகார்களை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
 
பின்னர் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், அவரது தோழி சசிகலாவுக்கு எதிராகவும் பேசி வந்தார். தன்னுடைய பேட்டிகள் மூலம் சசிகலாவுக்கு பல குடைச்சல்களை கொடுத்தார் சசிகலா புஷ்பா.
 
முதல்வரின் கையெழுத்து தவறாக பயன்படுத்தப்படுகிறது என பரபரப்பை ஏற்படுத்தினார். ஜெயலலிதாவின் இந்த நிலமைக்கு காரணம் சசிகலா தான் என கடுமையாக சாடினார். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா நலம்பெற்றுள்ள நிலையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
 
அதில், லட்சக்கணக்கான தொண்டர்களின் குரலான அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலர் அம்மா அவர்களின் கட்சிப் பதவிக்கு களங்கமும் ஆபத்தும் விளைவிக்க ஒரு கும்பல் சதி செய்ததை கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினராக முறியடித்தேன்.
 
எதிர்பாராத அதிர்ச்சியில் தங்களது கனவு தகர்க்கப்பட்டதால் அந்த கும்பல் என்னை பழிவாங்க தொடர்ச்சியாக பல வகைகளில் முயற்சி செய்து வருகிறது. எத்தகைய நெருப்பாற்றிலும் நீந்தும் சக்தியும் துணிவும் எனக்கு உண்டு. எத்தகைய மிரட்டலுக்கும் சற்றும் அஞ்சாமல் விழிப்புணர்வுடன் செயல்பட்டு எந்தச் சூழ்நிலையிலும் சதியை முறியடிப்பேன்.
 
அதுபோல அரசியலமைப்புச் சட்டப்படி, மாண்புமிகு அம்மா அவர்களின் முதல்வர் பதவிக்கு எந்தவிதப் பிரச்னையும் வராமல் பாதுகாத்து மக்கள் உணர்வுக்கு மதிப்பும், நட்புக்கு மரியாதையும் காட்டிய மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு தொண்டர்களின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து கழகத்தின் வெற்றியை தேடித்தர தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு வாக்காளப் பெருமக்களை பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். தனிப்பட்ட விருப்பு வெறுப்பை யார்மீதும் காட்டாமல் எனது மக்கள் பணி துணிவுடன் தொடரும் என்றார் சசிகலா புஷ்பா.

 

வெப்துனியாவைப் படிக்கவும்