சசிகலாவிற்கு கிடைத்துள்ள 15 நாட்கள் - அரசியல் திட்டங்கள் என்ன?
வியாழன், 22 மார்ச் 2018 (10:59 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அவரது கணவர் நடராஜன் மரணமடைந்ததால் 15 நாட்கள் பரோலில் வெளிவந்துள்ளார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் சமீபத்தில் மரணம் அடைந்தார். எனவே, சசிகலாவிற்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. எனவே, நேற்று முன் தினம் இரவு தஞ்சாவூர் சென்ற சசிகலா கணவரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார். நேற்று மாலை இரவு நடராஜனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பரோலில் வெளிவந்த சசிகலாவிற்கு கடந்த முறை போலவே தற்போதும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்கிற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். இந்த 15 நாட்களும் தஞ்சாவூர் மாவட்டம் பரிசுத்தம் நகரிலுள்ள எண். 12 என்ற வீட்ட்டில் மட்டுமே தங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
சசிகலா சிறையில் இருக்கும் போது அவர் யாரை சந்திக்கிறார்? என்ன பேசுகிறார் என்கிற அனைத்து தகவலும் மத்திய மற்றும் கர்நாடக அரசுகளின் உளவுத்துறையின் காதுகளிலிருந்து தப்ப முடியாது. அந்நிலையில்தான் கணவரின் மரணம் மூலம் சசிகலாவிற்கு 15 நாட்கள் பரோல் கிடைத்துள்ளது. இறுதி அஞ்சலிக்கு ஒரு நாள், மீண்டும் சிறைக்கு செல்ல ஒரு நாள் என 2 நாட்கள் கழிந்தாலும், அவருக்கு முழுதாக 13 நாட்கள் இருக்கிறது.
அதில் அவர் தினகரன், திவாகரன், விவேக் உள்ளிட்ட அவரின் உறவினர்களிடம் அரசியல் ரீதியாக உரையாடுவார். திட்டங்கள் தீட்டப்படும். அடுத்த என்ன செய்வது என ஆலோசிக்கப்படும். அவரை யார் சந்திக்கிறார்கள் என வேண்டுமானால் உளவுத்துறை நோட்டமிடலாம். ஆனால் என்ன பேசுகிறார்கள் என்பதை கண்டறிய முடியாது.
சமீபத்தில்தான் தினகரன் தனது அணிக்கு பெயர் மற்றும் கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தினார். மேலும், 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு சசிகலாவின் பரோல் நாட்களிலேயே வந்துவிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக கையை பிசைந்து நிற்கும் எடப்பாடி அரசு, கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரின் அரசியல் நகர்வுகள், பாஜகவிற்கு எதிராக ஒன்று திரண்டுள்ள தமிழகம் என அரசியல் களம் சூடி பிடித்துள்ள சூழ்நிலையில்தான் சசிகலா வெளிவந்துள்ளார்.
எனவே, தமிழக அரசியலை நிர்ணையிக்கும் சில முக்கிய அறிவுரைகள் மற்றும் உத்தரவுகளை அவர் தனது குடும்பத்தினருக்கு பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.