தடை நீங்கியது: பரோலில் வருகிறார் சசிகலா!

வியாழன், 5 அக்டோபர் 2017 (15:45 IST)
கடந்த சில தினங்களாக பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்த சசிகலாவுக்கு சென்னை மாநகர காவல்துறை தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளதால், அவர் பரோலில் வெளியே வர உள்ளது உறுதியாகியுள்ளது.


 
 
சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் சென்னை குளோபல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை காரணம் காட்டி சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் கேட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் மனு அளிக்கப்பட்டது.
 
அதில் போதிய ஆவணங்கள் இல்லை என கூறி அவரது மனு சிறை நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் சில ஆவணங்களை இணைத்து பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார் சசிகலா. இதனையடுத்து சசிகலா பரோல் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தடையில்லா சான்றிதழ் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது கர்நாடக சிறைத்துறை.
 
இந்த தடையில்லா சான்றிதழ் அளிப்பதில் கால தாமதம் ஏற்படுவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சென்னை மாநகர காவல்துறை தடையில்லா சான்று அளித்துள்ளதாக கர்நாடக சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சசிகலா பரோலில் வெளிவருவது உறுதியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
 
சசிகலா இன்று மாலையோ அல்லது நாளை காலையோ பரோலில் வெளிவரலாம் என கூறப்படுகிறது. சசிகலாவுக்கு ஜோதிடப்படி இன்றைய நாள் சாதகமாக இருப்பதால் அவர் பரோலில் வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்