ஜெயலலிதா வீட்டில் வேலை செய்வதோடு சசிகலா நிறுத்திக்கொள்ள வேண்டும்: எச்சரிக்கும் சசிகலா புஷ்பா!
திங்கள், 10 அக்டோபர் 2016 (13:34 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அரசு நிர்வாகத்தை இயக்குவது யார்? அதிகாரிகள், அமைச்சர்களுக்கு உத்தரவிடுவது யார்? என்ற கேள்வி எழுந்து வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை கடுமையாக சாடினார்.
வெங்கய்யா நாயுடு, ராகுல் காந்தி, ஸ்டாலின் போன்ற தலைவர்களால் கூட ஜெயலலிதாவை நேரில் சந்திக்க முடியவில்லை. அப்படியானால் ஜெயலலிதா அதிகாரிகளையும் சந்திக்க முடியாத நிலையில் உள்ளார், அவர்களுக்கு உத்தரவை பிறப்பிக்க முடியாத நிலையில் உள்ளார் என்றுதானே அர்த்தம்.
அப்படியானால் அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பிப்பது யார். முதல்வருடன் மருத்துவமனையிலேயே தங்கியுள்ள சசிகலா தான் அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறாரா? எந்த பதவியிலும் இல்லாத ஒரு தனி நபர் எப்படி அதிகாரிகளை கட்டுப்படுத்த முடியும். இது ஒன்றும் மன்னராட்சி கிடையாது. ஜனநாயக நடைமுறையில், தனி நபர்களால் அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது. இதுகுறித்து பிரதமர் உடனடியாக விசாரிக்க வேண்டும்.
2011-லேயே சசிகலா கும்பல் பற்றி அறிந்துதான் ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியேறினார். அந்த கும்பலின் சதியை தனி நபராக அப்போது ஜெயலலிதா முறியடித்தார். அப்படிப்பட்டவருக்கே இன்று உடல் நிலை சரி இல்லை. இப்போது இந்த சதி கும்பலை யார் வெளியே அடித்து விரட்டுவது என்பது தெரியவில்லை. அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும், இந்த சதியை முறியடிக்கும் பொறுப்பு உள்ளது.
மீண்டும் ஜெயலலிதாவின் வீட்டுக்குள் சசிகலா வந்தபோது, எனக்கு எந்த அதிகாரமும் வேண்டாம். வீட்டில் உதவி வேலைகள் மட்டும் செய்வேன் என்று உறுதியளித்திருந்தார். எனவே, ஜெயலலிதா வீட்டில் வேலை செய்வதோடு சசிகலா நிறுத்திக்கொள்ள வேண்டும். முதல்வர் வீட்டில் இருப்பவர்கள் அரசு அதிகாரிகளை கட்டாயப்படுத்த முடியாது என்றார் அதிரடியாக.