இதனையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது அரசு. இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகத்தை எழுப்பியவர்களிடமும், ஜெயலலிதா தொடர்புடையவர்களிடமும் தனது விசாரணையை நடத்தி வருகிறது. குறிப்பாக, விவேக், கிருஷ்ணப்பிரியா, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர் பாலாஜி, ஜெ.வின் உதவியாளர் பூங்குன்றன், தலைமை செயலாளர் வானதி சீனிவாசன் உட்பட பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
அதேபோல், சிறையில் உள்ள சசிகலாவிற்கும் விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியது. ஆனால், பல்வேறு காரணங்களை கூறி கமிஷனில் ஆஜராவதை சசிகலா தவிர்த்து வருகிறார்.
அந்நிலையில், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் இன்று காலை விசாரணை கமிஷனில் ஆஜரானார். அவரிடம் 4 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது பலரும் சர்ச்சைக்குறிய கருத்துகளை கூறினர். அப்படி கூறியவர்களை பற்றிய 24 வீடியோக்களை எடுத்து ஒரு பென் டிரைவில் காப்பி செய்து அதை விசாரணை ஆணையத்திடம் கொடுத்து, அவர்களிடமும் விசாரணை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்” என அவர் பேட்டியளித்தார்.