கரூர் மாவட்டத்தில் வாங்கல் அடுத்த மல்லம்பாளையத்தில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. புதுக்கோட்டையில் அரசு மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதால் கரூரில் செயல்படும் மணல் குவாரிகள், சேமிப்பு கிடங்குகள் மூடப்பட்டன. மண்மங்களத்தை அடுத்த செம்மடையில் லாரிகள் நிறுத்தும் இடத்தில் ஆயிரக்கணக்கான லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த 30 நாட்களுக்கும் மேலாக லாரிகள் நிறுத்தப்பட்டுளளதால் தங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அண்டை மாவட்டங்களான திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் அரசு மணல் குவாரிகள் செயல்பட துவங்கியுள்ள நிலையில், கரூரிலும் அரசு மணல் குவாரியை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், ஏற்கனவே பணம் செலுத்திக் கொண்டு காத்திருக்கும் எங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மணல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து மனு அளித்தனர்.
கரூர் ஆசாத் சாலையில் உள்ள பொதுப் பணித்துறை மற்றும் நீர்வள ஆதார துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர். அப்போது, மணல் குவாரியில் கண்காணிப்பு கேமரா பொறுத்தும் பணிகள் நடைபெற்று முடிந்து விட்டதாகவும், வரும் 12ம் தேதிக்குப் பிறகு குவாரிகள் முழுமையாக செயல்படும் என்று உதவி செயற் பொறியாளர் வெங்கடேஷன் தெரிவித்தார்.