அதிகரிக்கும் கள்ளச்சாராய வியாபாரம்: ட்ரோன் வைத்து பிடித்த போலீஸார்!

வியாழன், 9 ஏப்ரல் 2020 (15:53 IST)
ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் அதிகரித்து வரும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மது கிடைக்காமல் தவிக்கும் மதுவிரும்பிகள் பலர் கள்ள சாரயம் உள்ளிட்டவற்றை நாட தொடங்கியுள்ளனர்.

இதை வாய்ப்பாக கொண்டு பல இடங்களில் கள்ளச்சாரயம் காய்ச்சி விற்க பலர் முயற்சித்து வருகின்றனர். சேலம் மலைப்பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சமயோஜிதமாக திட்டமிட்ட போலீஸார் ட்ரோன்கள் மூலம் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சும் இடங்களை கண்காணித்து பின்னர் வளைத்து பிடித்துள்ளனர்.

கடந்த நான்கு நாட்களில் சேலம் மாவட்டத்தில் கள்ளசாராயம் தொடர்பாக 165 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல கள்ளக்குறிச்சியில் நடந்த அதிரடி சோதனையில் ஆயிர லிட்டர் கணக்கான சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பெண்கள் உட்பட 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மதுவுக்கு அடிமையான சிலர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது ஒருபக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மறுபுறம் இதுபோன்ற கள்ளச்சாராய முயற்சிகளும் பீதியை ஏற்படுத்தி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்