சென்னை-சேலம் நெடுஞ்சாலை இடையே ரூ. 10 ஆயிரம் கோடியில் பசுமை வழித்தடம்; மத்திய அமைச்சகம்

திங்கள், 26 பிப்ரவரி 2018 (07:29 IST)
ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் சென்னை-சேலம் நெடுஞ்சாலை இடையே பசுமை வழித்தடம் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருடன் தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனையை நேற்றிரவு நடத்தினார்.
 
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர், தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகளை மத்திய அமைச்சரிடம் எடுத்துரைத்தார். மேலும் பல கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை  நிதின் கட்காரியிடம் அளித்தார். அதில் 
 
# காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் ஒழுங்குமுறை குழுவை விரைவாக அமைக்க வேண்டும்.
 
# கிருஷ்ணா, கோதாவரி, நர்மதா, காவிரி என அனைத்து நதிகளையும் இணைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
 
# சேலம் நகரத்தில் நிலவும் கடுமையான போக்குவரத்தை கருத்தில் கொண்டு, சேலம் மற்றும் சென்னை நகரங்களுக்கு இடையே பசுமை வழித்தடம் அமைக்கவேண்டும்.
 
# பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே பசுமை வழித்தடத்தையும் சேர்க்கவேண்டும்.
 
இந்நிலையில் செய்தியாலர்களிடம் பேசிய நிதின் கட்காரி, ரூ.10 ஆயிரம் கோடியில் சென்னை-சேலம் இடையே 8 தடங்கள் வழியாக பசுமை வழித்தடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் பயணம் நேரம் 2 மணி நேரம் குறையும் என்றார். 
 
மேலும்  தமிழகமும், கர்நாடகவும் இந்தியாவின் 2 கண்கள் என்பதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க  துரித நடவடிக்கை எடுக்கப்படும் என நிதின் கட்காரி கூறினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்