எனக்கு வயது 50 ; சர்க்கரை நோய் இருக்கு ; மன்னிப்பு கொடுங்க - ரவுடி பினு கெஞ்சல்

செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (14:27 IST)
நீங்கள் நினைப்பது போல் நான் பெரிய ரவுடியெல்லாம் இல்லை. என்னை மன்னித்து விடுதலை செய்யுங்கள் என  சரணடைந்த ரவுடி பினு போலீசாரிடம் கெஞ்சியுள்ளார்.

 
கடந்த 6ம் தேதி இரவு சென்னை பூந்தமல்லை அருகே உள்ள ஒரு லாரி செட்டில் போலீசாரால் தேடப்பட்ட பிரபல ரவுடி பினுவின் பிறந்த நாள் விழாவில் 71 ரவுடிகளை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். ஆனால், பினு தப்பி சென்றுவிட்டார். அவர் மீது 3 கொலை மற்றும் ஆள்கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது.    
 
பினுவை சேர்த்து தப்பி சென்ற மற்ற ரவுடிகள் அனைவரும் தங்களை பாதுகாக்க கொலையும் செய்வார்கள் என்பதால், தேவைப்பட்டால் அவர்கள் சுட்டுப்பிடிக்கவும் தனிப்படையினருக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பதாக கூறப்பட்டது. அதனால், 4 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் அவரை தேடி வந்தனர். 
 
அந்நிலையில், ரவுடி பினு அம்பத்தூர் காவல்துணை ஆணையர் முன்னிலையில் இன்று காலை சரணடைந்துள்ளார். இந்நிலையில், காவல் நிலையத்தில் அவர் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது:
 
சூளைமேட்டில் வசித்து போது நான் பல தவறுகள் செய்தேன். ஆனால், திருந்தி வாழ ஆசைப்பட்டு 3 வருடங்கள் தலைமறைவாக இருந்தேன். அந்நிலையில், எனது 50வது பிறந்த நாளை கொண்டாட வேண்டுமென எனது தம்பி என்னை சென்னைக்கு வருமாறு அழைத்தேன். வந்த இடத்தில் ரவுடிகள் இருந்தனர். அப்போது போலீசார் எங்களை சுற்றி வளைத்தனர். ஆனால், எப்படியோ நான் தப்பிவிட்டேன்.
 
தற்போது நான் எங்கு சென்றாலும் சென்னை போலீசார் என்னை விரட்டி வருகின்றனர். எனவேதான் நான் சரணடைந்துள்ளேன். நீங்கள் நினைப்பது போல் நான் பெரிய ரவுடியெல்லாம்  இல்லை. எனக்கு 50 வயது ஆகிறது. எனக்கு சக்கரை நோய் இருக்கிறது. என்னை போலீசார் மன்னித்து விடுதலை செய்ய வேண்டும்” என அவர் உருக்கமாக பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்