அடம் பிடிக்கும் ராமதாஸ்

வெள்ளி, 27 மே 2016 (12:06 IST)
ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் தமிழக கவர்னர் ரோசய்யா மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆகியோரை உனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ராமதாஸ் மனம் குமுறி வெடித்துள்ளார்.
 

 
இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கிய புகாரின் பேரில் அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதியில் இம்மாத இறுதியில் வாக்குப்பதிவை நடத்த வேண்டும் என அதிமுக வேட்பாளர்கள் மனு அளித்துள்ளனர். இதையே தேர்தல் ஆணையத்திற்கு கவர்னர் ரோசய்யா பரிந்துரை செய்துள்ளார். இதன்மூலம் கவர்னர் அதிமுக விசுவாசி என்பதை அவர் நிரூபித்துள்ளார்.
 
இரு தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. ஆனால், இதைப்பற்றி கவலைப்படாத கவர்னர் உடனே தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைந்துள்ளதன்  மூலம் அதிமுகவின் குரலாக மாறி ஜனநாயகப் படுகொலைக்கு துணை போயிருக்கிறார்.
 
தமிழக அரசின் ஊழல்கள் குறித்து ஆதாரங்களுடன் பாமக  புகார் அளித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை எடுக்காத கவர்னர் அதிமுக வேட்பாளர்கள் அளித்த புகார் மனு மீது ஒரே நாளில் நடவடிக்கை எடுத்திருப்பதன் மர்மம் என்ன? என்பதை வெளிப்படையாக அம்பலப்படுத்திவிட்டார். ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு கவர்னர் பதவியும் தேவையில்லை என திமுக கூறியது சரியே.
 
மேலும், தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானி தேர்தல் நடைமுறை முடியும் முன்பே, கவர்னரை சந்தித்தது, விளக்க அறிக்கை தாக்கல் செய்ததும் தவறு.
 
எனவே, தமிழக கவர்றனர் ரோசய்யா மற்றும் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆகியோரை உடனே மாற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்