சென்னையில் எத்தனை மேம்பாலங்கள் கட்டினாலும் சாலைகளை விரிவாக்கினாலும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. அதுவும் பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை 8 முதல் 10 மணி மற்றும் மாலை 5 முதல் 7 மணி வரை அலுவலகம் செல்வோர் மற்றும் பள்ளிக் கல்லூரி செல்வோருக்குப் பெரும் இடைஞ்சலாக போக்குவரத்து நெரிசல்கள் இருந்து வருகின்றன.
இதற்காக இப்போது சென்னையில் புதிதாக டிராபிக் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ROADEO என்று பெயரிடப்பட்டுள்ள இந்த டிராஃபிக் ரோபோவை நேற்று சென்னை மாநகர காவல் ஆணையர் அறிமுகப்படுத்தினார். இந்த ரோபோ சாலைப் போக்குவரத்துகளை சீரமைத்தல் மற்றும் மாணவர்கள், வயதானவர்களுக்கு சாலையைக் கடக்க உதவும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட டிராபிக் போலிஸ் போலவே இந்த ரோபோவுக்கு இரண்டு கைகள் உள்ள வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. நெரிசல் நேரங்களில் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி பாதச்சரிகளை நடைபாதையைக் கடக்க உதவி செய்யும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மானிட்டரும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ப்ளூடுத் மூலமாகவும் இயக்க முடியும். இந்த ரோபோவின் செயல்பாட்டைப் பொறுத்து மேலும் ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.