ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து: விரைவில் அறிவிக்க இருக்கும் தேர்தல் ஆணையம்!

சனி, 8 ஏப்ரல் 2017 (16:36 IST)
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது ஆர்கே நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.


 
 
இந்நிலையில் ஆர்கே நகரில் பண வினியோகம் பெரிய அளவில் நடந்த்தற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வருமான வரிதுறையும், ஆர்கே நகர் தேர்தல் பார்வையாளர்களும் அறிக்கை அனுப்பியுள்ளனர்.
 
இந்த ஆவணங்களும், அது தொடர்பான அறிக்கையையும் வைத்து இன்று காலை 11 மணியளவில் இந்திய தேர்தல் ஆணையம் கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில் ஆர்கே நகர் தேர்தலை ரத்து செய்து தள்ளிவைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
மேலும் ஒருவேளை டிடிவி தினகரன் தரப்பினர் மட்டும் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணம் கிடைத்துள்ளதால் தினகரனை மட்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி நீக்கம் செய்வதற்கான அறிவிப்பும் கூட வெளியாகலாம் என தகவல்கள் வருகின்றன. இந்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்