மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்நிலையில், அவர் கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணமடைந்தார். எனவே, அந்த தொகுதி தற்போது காலியாக இருக்கிறது.
வருகிற ஏப்ரல் 12ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற மார்ச் மாதம் 16ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடைபெறும் எனவும், மார்ச் 27ம் தேதி மனுவை திரும்ப பெறும் நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 15ம் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அந்த தொகுதியில் யார் யாரெல்லாம் போட்டியிடுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையேயும், அரசியல் விமர்சகர்களிடையேயும் இப்போதே எழுந்துள்ளது. ஜெ.வின் மறைவிற்கு பின், அரசியலுக்கு வந்துள்ள அவரது அண்ணன் மகள் தீபா, கண்டிப்பாக நான் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடுவேன் எனக் கூறியிருந்தார். அதேபோல், தங்களது இருப்பைக் காட்டிக் கொள்ள சசிகலா தரப்பும் ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளரை நிறுத்தும்.
சசிகலா தரப்பிற்கு எதிராக களம் இறங்கியுள்ள ஓ.பி.எஸ் தரப்பும், தங்கள் பலத்தை காட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளரை நிறுத்தும். அதேநேரம், அதிமுகவில் பிளவு ஏற்பட்டிருக்கும் இந்த அரசியல் சூழ்நிலையையை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த துடிக்கும் திமுகவும் கண்டிப்பாக இதில் வேட்பாளரை நிறுத்தும்.