களைகட்டிய ஜல்லிக்கட்டு..! தொடங்கியது மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கான முன்பதிவு.!!

Senthil Velan

புதன், 10 ஜனவரி 2024 (13:18 IST)
மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான முன்பதிவு தொடங்கியது.
 
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் பிரசித்திப் பெற்றவை.  இந்தாண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அண்மையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கான முன்பதிவு ஆன்லைனில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள், காளைகள் முன்பதிவு செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்தார்.
ALSO READ: பிரேமலதாவை சந்தித்த முன்னாள் அமைச்சர்..! விஜயகாந்தின் புகைப்படத்திற்கு மரியாதை..!!
madurai.nic.in என்ற இணையத்தளத்தில் காளை உரிமையாளருக்கும், மாடு பிடி வீரர்களுக்குகென தனித்தனியாக உள்ள பிரிவுகளில் ஜன.10-ம் தேதி முதல் ஜன.11-ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று பிற்பகல் 12 மணிக்கு இணையதளத்தில் தொடங்கியது.
 
முறைகேடுகளை தடுக்க QR code இணைப்புடன் டோக்கன் வழங்கப்படும் எனவும்,  ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, ஆன்லைன் மூலமே டோக்கன் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், முன்பதிவு செய்தவுடன் அதற்கான ஒப்புகைச்சீட்டை பெற்றுக்கொள்ளப்பட்டு, ஆவணங்கள் சரி பார்க்கப்பட்ட பின்னர் தகுதியுள்ள விண்ணப்பங்களுக்கு மட்டுமே டோக்கன் தரவிறக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்