பன்னீருடன் சந்திப்பு ; ரகசியங்களை கசிய விடும் தினகரன் : பின்னணி என்ன?

திங்கள், 8 அக்டோபர் 2018 (11:55 IST)
துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் தினகரன் ஆகியோரின் சந்திப்பு குறித்த ரகசியங்கள் வெளியாகி வருவதன் பின்னணி தெரிய வந்துள்ளது.

 
2017ம் ஆண்டு ஜூலை மாதம் தினகரனும், ஓபிஎஸ்-ஸும் சந்தித்து பேசினர். அதேபோல், போன வாரம் கூட தினகரனை சந்திக்க ஓ.பி.எஸ் நேரம் கேட்டார் என தங்க தமிழ்ச்செல்வன் கொளுத்திப்போட, ஆம், பன்னீருக்கும், எனக்கும் நெருக்காமான ஒருவர் வீட்டில் இருவரும் சந்தித்து பேசினோம். அவருக்கு முதல்வராக வேண்டும் என ஆசை. எனவே, அது தொடர்பாக என்னிடம் உதவி கேட்டார் என தினகரன் பற்ற வைக்க தற்போது அதிமுகவில் புகைச்சல் கிளம்பியுள்ளது.
 
அதுவும், எங்களுக்கு எதிராகத்தானே அவர் தர்ம யுத்தம் தொடங்கினார். ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட என்னை அவர் ஏன் ரகசியமாக சந்திக்க வேண்டும். அவர் வாயில் இன்னும் பல உண்மைகள் வெளியே வரும். நான் ஒப்புக்கொள்ள வைப்பேன் என தினகரன் பேசியிருப்பது அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
அதாவது, கடந்த வாரத்தில் பன்னீரின் சகோதரர் ராஜா தினகரன சந்தித்து ஒரு மணி நேரம் பேசியிருக்கிறார். அப்போது, அண்ணன் மீண்டும் முதல்வராக வேண்டும் என விரும்புகிறார். அதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறார் எனக்கூற, அதை தினகரன் ஏற்கவில்லையாம். அவர் எவ்வளவு எடுத்துக்கூறியும் தினகரன் மறுத்துவிட்டதாக தெரிகிறது.
 
இது ஓ.பி.எஸ்-ஸுக்கு தெரிவிக்கப்பட, மன்னார்குடியில் நடந்த கூட்டத்தில் தினகரனை கடுமையாக விமர்சித்து பேசினார் ஓபிஎஸ். தம்பியை பேச்சுவார்த்தைக்கு அனுப்பிவிட்டு, அடுத்த தன்னை ஏகத்துக்கும் திட்டி ஓபிஎஸ் பேசியது தினகரனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
 
அதனால்தான், தங்க தமிழ்ச்செல்வன் மூலம், தன்னை ஓபிஎஸ் சந்தித்ததை லீக் செய்தார். அதன் பின் செய்தியாளர் சந்திப்பை நடத்தி அனைத்தையும் ஒன்றுவிடமால் கூறினார் எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரம்  முதல்வர் எடப்பாடி தரப்பிற்கும் அடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாம். எனவே, ஓ.பி.எஸ்-ஐ எப்படி ஓரம் கட்டலாம் என்கிற சிந்தனையில் பழனிச்சாமி ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்